சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஜவுளி பூங்காவில் நீர், நிலம் மற்றும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான சாயப்பட்டறைகள் அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது; விவசாயத்தையும் குடிநீர் ஆதாரங்களையும் மேம்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அவற்றை அழிப்பதற்குத் துணைபோவதா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 
சேலம் மாநகர எல்லையில் உள்ள ஜாகிர் பாளையத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிப்காட் வளாகத்தில், 119 ஏக்கர் பரப்பளவில் ரூ.800 கோடி முதலீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக பல  சாயப்பட்டறைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் முதலிய பல நிறுவனங்களுக்கு சாயப்பட்டறை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், “தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும்கூட, மக்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது சாயப்பட்டறைகளை அமைப்பது மிகக்கொடிய பேரழிவை ஏற்படுத்தும் திட்டம்.” என்று அன்புமணி சாடியுள்ளார். 
”சாயப்பட்டறைகளால் இரு வகையாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது சாயப்பட்டறைகளின் தேவைக்காக தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் இராட்சத எந்திரங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அடுத்ததாக சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத பாதிப்பை  ஏற்படுத்தி விடும். அதனால் தான் சாயப்பட்டறைகளை சுற்றுச்சூழலின் முதல் எதிரியாக பாமக கருதுகிறது.
தமிழ்நாட்டில் சாயப்பட்டறைகள் செயல்படும் எந்த பகுதியிலும் அவற்றின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப் படுவதில்லை. கடலோரப்பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும் அமைந்திருக்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீர் அரைகுறையாக சுத்திகரிக்கப்பட்டு ஆறுகளிலும், கடல்களிலும் கலக்கவிடப்படுகின்றன. காவிரி, தென்பெண்ணை, பவானி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட பல ஆறுகள் சாயப்பட்டறை கழிவுகளால் தான் கொஞ்சம், கொஞ்சமாக கொலை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவு நீரை சாலை வழியாக கொண்டு வந்து சுத்திகரிப்பதற்கு வசதியாக, கடலூர் மாவட்டம் பெரியபட்டு பகுதியில் சாயப்பட்டறைகள், துணி ஆலைகள் ஆகியவற்றுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உண்மை என்னவென்றால், அங்குள்ள சாயப்பட்டறைகளின் கழிவுகளையும், கோவை மண்டலத்திலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகளையும் முறையாக சுத்திகரிக்காமல் கடலில் கலக்கச் செய்வது தான் அரசின் திட்டமாகும். இந்த நாசகார திட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி இன்று வரையிலும் அங்கு பேரழிவுத் திட்டம் வராமல் தடுத்து வருகிறது.” என்றும், 
”இரண்டாவதாக சாயப்பட்டறைகளின் கழிவு நீர் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அவற்றின்  வாயிலாக நிலத்தில் செலுத்தப்படுகிறது. இவை நிலத்தடி நீரில் கலந்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறைகளின் கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கவிடப்பட்டதால், அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள்  ஏற்பட்டிருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டாலும் அதேபோன்ற  நோய் பாதிப்புகள் ஏற்படுவது உறுதி.” என்றும் அவர் விவரித்துள்ளார். 
”சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகள், புளியம்பட்டி, குள்ளக்கவுண்டனூர், பல்பாக்கி, வெள்ளாளப் பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, செங்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ளக்கல்பட்டி, மாமாங்கம், கருப்பூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயிலாகத் தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு நிலத்தடி நீர் மட்டும் தான் பாசன ஆதாரமாக உள்ளது. இத்தகைய நிலையில் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரங்களும், வேளாண்மையும் முற்றிலுமாக அழிந்து விடும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்னர்வரை நிலத்தடி நீர் இளநீரைப் போன்ற சுவையுடன் இருந்தது. ஆறுகளிலும்  தூய்மையான நீர் ஓடியது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அவை அனைத்தும் சீரழிக்கப்பட்டன. அந்த சீரழிவுகளை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில்,  அவற்றை மேலும், மேலும் சீரழிக்கும் சதியில் தமிழக அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க. சார்பில் மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.