உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

ஜென் சி தி.மு.க.வினரை போலீஸ் மூலம் மிரட்டுவதா?- உதயநிதி

Staff Writer

புதிய தலைமுறை தி.மு.க.வினரை போலீஸ் மூலம் மிரட்டப் பார்க்கிறார்கள் என அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.  

"தி.மு.க.வின் ஜென் சி இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்திவந்த அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைதுசெய்ய முயற்சி செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், ஜென் சி கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவுசெய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ்செய்ய வைத்தது.

தி.மு.க. இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைபார்ப்பது… இதுதான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

தி.மு.க. இளைஞர்களைக் காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது." என்று உதயநிதியின் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.