தமிழ் நாடு

டம்மி சிஎம் பிறந்தநாளில்தான் போலி நூல்களுக்கு முத்திரை- தி.மு.க. பதிலடி

Staff Writer

டம்மி முதலமைச்சரின் பிறந்த நாளில்தான் போலி நூல்களுக்கு முத்திரை இடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் விஜய்க்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. 

முன்னதாக, கோவை நூலகத்துக்கு நூல் கொள்முதலில் ஊழல் செய்திருப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியதற்கு, தி.மு.க. தரப்பில் வெளியிடப்பட்டுள்ள பதிலடி அறிக்கை:

“ இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.

விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.

ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.

பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்ததேதிகூட டம்மி சிஎம்மின் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?

கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.

திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் டம்மி சிஎம் அறிக்கை விட்டு இருக்கிறாரா?” என்று தி.மு.க. கேட்டுள்ளது.