முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவப் படிப்பை முடித்தவர்களுக்கான கட்டாயப் பணியை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
“ தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சாரா மருத்துவ மாணவர்கள்( Non Service doctors) தோராயமாக 1200 பேர் முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும் 250 பேர் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் சேர்ந்து படிக்கிறார்கள்.
இவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள், அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக பணி புரிய வேண்டும் அல்லது அதற்கு பதிலாக 40 லட்சம்/ 50 லட்சம் ரூபாய் தொகையை அரசுக்கு வழங்க வேண்டும் .இதை நிறைவேற்றினால் தான் அவர்களுக்கு அவர்களது அசல் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு பணி வழங்குவதற்கு போதிய பணியிடங்கள் இல்லாத காரணத்தால், இந்த இரண்டு ஆண்டு கட்டாயப் பணி காலத்தை ஓராண்டாக குறைத்து , 2023/2024 ஆண்டில் அரசாணை வெளியிப்பட்டது.
அதுபோல் இனிவரும் ஆண்டுகளிலும் அரசு மருத்துவமனைகளில் அப்போதிருக்கும் மருத்துவர்களின் தேவையை பொறுத்து இந்தக் கட்டாய பணிக் காலத்தை இரண்டு ஆண்டிலிருந்து ஓராண்டாக குறைத்துக் கொள்ளலாம் என அரசு(GO 351 dt 27.10.2023, GO 17 dt 11.01.2024 ) ,அரசாணை வெளியிட்டிருந்தது.
2021 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாண்டு படிப்பை முடித்து தேர்வெழுதிய முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு , மார்ச் மாதம், ஏப்ரல் மாதம் கட்டாயப் (bond ) பணிக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முதலில் மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவ சேவை ( DMS) துறையின் மருத்துவமனைகளுக்கும் ,இரண்டாவது கட்டமாக சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் GCC , மூன்றாவது கட்டமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் DME என மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டன.
இக்கலந்தாய்வுகளை முறையாக நடத்தாத காரணத்தாலும், கலந்தாய்வை ஒரே கட்டமாக நடத்தாத காரணத்தாலும்,தங்கள் சொந்த ஊர் மற்றும் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியிடங்கள் இருந்தும் அவ்விடங்களில் சேர முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டது.
இதனால் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் , பல மருத்துவர்கள் அவர்களின் சொந்த ஊர்களிலிருந்து பல கிலோமீட்டர்கள் தாண்டி பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னையில் இருப்பவர்கள் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் கன்னியாகுமரி போன்ற தொலை தூர இடங்களிலும், மதுரை போன்ற இடங்களில் உள்ளவர்கள் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளிலும் பணிபுரிய வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே , அந்த கலந்தாய்வுகளை ரத்து செய்துவிட்டு , புதிதாக ஒரே கலந்தாய்வாக நடத்தி அனைத்து மருத்துவர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை பலமுறை விடுக்கப்பட்டது.
ஆனால், அன்றைய அரசாங்கம் அதை நிராகரித்துவிட்டது.வழக்குகள் தொடுத்தும் நியாயம் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மருத்துவர்கள்,ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டது போல் தங்களுடைய கட்டாயப்பணிக் காலத்தையும் ஓராண்டாக குறைக்க வேண்டுகோள் விடுத்தனர்.அதுவும் ஏற்கப்படவில்லை.
இந்நிலையில்,2022 ஆம் கல்வி ஆண்டில் படிப்பில் சேர்ந்த முதுநிலை மருத்துவர்கள் தேர்வு முடித்து கட்டாயப் பணியில் சேர ,அதே 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்திலேயே தயாராக இருந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோருக்கு உடனடியாக பணி வழங்கப்படாததால், அவர்களில் சிலர் பணி வழங்கக் கோரி வழக்கும் தொடுத்தனர்.
வழக்குத் தொடுத்த சில மருத்துவர்களுக்கு பணி வழங்கப்பட்டது.ஆனால், காலிப்பணியிடம் இல்லாத காரணத்தால், பெரும்பாலானோருக்கு உரிய நேரத்தில் அரசுப் பணி வழங்கப்படவில்லை.
அவ்வாறு பணி வழங்காததால் , எங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை வழங்கி , பாண்டில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரினர்.
அவர்களில், ஏறத்தாழ 90 மருத்துவர்களுக்கு அவர்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாண்டிலிருந்தும் விடுவித்து உத்தரவு வழங்கப்பட்டது.
2022-2025 கல்வியாண்டில் சேர்ந்த , பெரும்பாலான மருத்துவர்களுக்கு, 921 பேருக்கு ,அசல் கல்விச் சான்றிதழ்களை வழங்கி, காலிப்பணியிடம் இருக்கும் பொழுது, அரசு அழைத்தால் உடனடியாக வந்து பணிபுரிவோம் என்று பெயருக்கு ஒரு உறுதி மொழியை (Affidavit) பெற்றுக் கொண்டு பாண்டிலிருந்து அரசு விடுவித்துவிட்டது (GO No 167 dt 24.06.2026).கட்டாய பணிக்கான அரசின் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணியில் சேராத மருத்துவர்களும் இதில் அடங்குவர்.
கட்டாய பணியில் சேராமல் அரசின் விதிமுறைகளை மதிக்காத பல மருத்துவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பாண்டிலிருந்து விடுவித்தது தவறானது. பாரபட்சமானது.அதே நேரத்தில் அரசின் விதிமுறைகளை மதித்து கட்டாய பணியில் சேர்ந்து பணிபுரியும் மருத்துவர்களை அரசு ஓராண்டுக்கு மேல் பணி செய்ய வைத்து பழி வாங்குகிறது.
தற்போது 2023 ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்து, 2026 அக்டோபரில் படிப்பை முடித்தவர்களுக்கு கட்டாயப் பணி வழங்கப்பட வேண்டும்.
ஆனால், 2021ல் சேர்ந்தவர்கள் 2025 பிப்ரவரி மாதம் கட்டாய பாண்டு பணிக்காக காத்திருந்து , முறைகேடான கவுன்சிலிங் மூலமாக பணியை பெற்று , தற்போது வரை மிகுந்த கடினமான சூழ்நிலையில் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.இது பாரபட்சப் போக்காகும்.அவர்கள் படித்து முடித்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகி விட்டது. அவர்களது பாண்டு காலத்தை ஓராண்டாக குறைத்து அவர்களை பாண்டில் இருந்து விடுவித்திருக்க வேண்டும்.
அந்தப் பணியிடங்களில் 2022 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த அனைத்து மருத்துவர்களையும் பணி அமர்த்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களில் 921 பேருக்கு எந்த பணியையும் வழங்காமல் பாண்டிலிருந்து விடுவித்தது பாரபட்சமானது.
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மற்றொரு கண்ணில் வெண்ணையும் தடவுவது போல் உள்ளது அரசின் செயல்பாடு.
இந்நிலையில் 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் (Service Quota) முதுநிலை படிப்பில் சேர்ந்த, அரசு மருத்துவர்களுக்கு ஏற்கனவே பணி ஆணை வழங்கப்பட்டு விட்டது.
2023 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த அரசு சாராத (Non Service )முது நிலை மருத்துவர்களுக்கு , பணி ஆணை வழங்கியிருக்க வேண்டும்.2021 ஆம் ஆண்டு படிப்பில் சேர்ந்த மருத்துவர்களை பாண்டிலிருந்து விடுவித்திருக்க வேண்டும்.ஆனால் அதை அரசு செய்யவில்லை.
2021 ஆம் ஆண்டு படிப்பில் சேர்ந்த மருத்துவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரி பலமுறை ,அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இந்த கோரிக்கையில் நியாயம் உள்ளது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
ஆனால் , மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் இக்கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.வேண்டுமானால் வழக்கு தொடுத்துக் கொள்ளுங்கள் என்று அம்மருத்துவர்களிடம் கூறி வருகிறார். இது சரியல்ல.
எனவே,
* 2021 மற்றும் 2022 ல் படிப்பில் சேர்ந்த மருத்துவர்களுக்கு அவர்களது பாண்டு காலகட்டத்தை ஓராண்டாக குறைத்து, உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.
* இந்த கட்டாயப் பணி கால கட்டத்தை தேர்வு முடிந்த நாளிலிருந்து கணக்கிட வேண்டும்.
போதிய பணியிடங்கள் இல்லாத காரணத்தால் இனி வரும் காலங்களில் அனைத்து அரசு சாரா முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்களின்(Non Service & SS bond doctors ) பாண்ட் கட்டாயப் பணியை(Bond Posting) ஓராண்டாகக் குறைத்து ,மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் (admission Prospectus) வெளியிட வேண்டும்.
அனைத்து பேட்ச் மாணவர்களுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பாண்டு காலகட்டம் இருப்பது போல் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.வெவ்வேறு பேட்ச் மாணவர்களுக்கிடையே பாரபட்சப் போக்கை கடைப்பிடிப்பதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
# கட்டாய பணியில் பணிபுரியும் பெண்மருத்துவர்கள் , மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த ஓராண்டு காலகட்டத்தை சேவைக் காலமாக
( Service Period) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றுமகப்பேறு விடுப்பில் இருந்த பெண் மருத்துவர்கள் நம்பி இருந்தனர். ஆனால், அவ்வாறு மகப்பேறு விடுப்பு வழங்கப்படவில்லை.
ஊதியம் இல்லாத ஓராண்டு (தமிழ்நாடு அரசு ஆணைப் படி)மகப்பேறு விடுப்பு அல்லது ஊதியத்துடன் கூடிய 26 வார கால மகப்பேறு விடுப்பு( ஒன்றிய அரசு ஆணைப் படி) வழங்கிட வேண்டும்.அக்காலத்தை பணிக்காலமாக (service period) ஆக கணக்கில் எடுத்துக் கொண்டு , அதை பாண்டு காலத்தில் கழித்து ,அரசாணை வெளியிட வேண்டும் என குழந்தைகள் பெற்றுள்ள ,பெண் மருத்துவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்னர்.அக்கோரிக்கையை அரசு கனிவுடன் நிறைவேற்ற வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு தான் , பெண்களுக்கு அதிக நாட்கள் ( ஓராண்டு) மகப்பேறு விடுப்பு வழங்குகிறது. அண்மையில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளநிலை மருத்துவம் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் என தொடர்ச்சியாக உயர்கல்வி படிக்கின்ற பெண்கள், கல்வி கற்கும் பொழுது குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமம் இருக்கிறது.படிப்புக் காலம் முடிந்து, 30 வயதுக்குப் பிறகு, குழந்தை பெற்றுக்கொள்கின்ற பெண் மருத்துவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வேறொரு ஊரில் குழந்தையுடன் பாண்டு பணி புரிவதில் சிரமம் இருக்கிறது.இந்நிலையில் ஒரு நாள் கூட பணிபுரியாமல் 921 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பாண்டிலிருந்து விடுவித்த தமிழக அரசு, பெண் மருத்துவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிராகரிப்பது சரியல்ல. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் .
# பயிற்சி மருத்துவர்கள்,முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்களின் பயிற்சிகால உதவி ஊதியம் 2021 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் 37க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணி புரியும் பயிற்சி மருத்துவர்கள்,முதுநிலை மருத்துவர்கள் (MD/MS) மற்றும் உயர் சிறப்பு மருத்துவ( DM/Mch )மாணவர்கள் ,மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் மருத்துவ சிகிச்சை தொடர்பான பணிகளில் பெரும்பாலான பணிகளை செய்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு காய்ச்சல் முகாம், வெள்ள பாதிப்பு முகாம் , பேரிடர் கால முகாம் பணிகளை வழங்கி வருகிறது.அவர்களின் படிப்பிற்குத் தொடர்பில்லாத மருத்துவக் காப்பீடு திட்டப் பணி போன்ற பணிகளையும் வழங்கிவருகிறது. எனினும் இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கால உதவி ஊதியத்தை ஒப்பிடும்பொழுது, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்ற பயிற்சிக் கால உதவி ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது.இந்நிலையில் மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் ,விடுதிக் கட்டணம் உணவு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான செலவுகள் செய்ய வேண்டி உள்ளது. விலை வாசியும்,போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்து வருகிறது .முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் பலர் திருமணமானவர்களாக, குழந்தைகள் உள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் குடும்பச் செலவுகளையும் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிக் கால உதவி ஊதியம்(stipend) மிகக்குறைவாக உள்ளது.எனவே, தமிழ்நாடு அரசு இவர்களுக்கான பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
# மருத்துவத்துறை பணியாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பொது சுகாதாரத்துறை பறிக்கும் சுற்றறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலையில் அரசை விமர்சித்து கருத்துக்களை கூறக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் சுற்றறிக்கை விடுவது ஏற்புடையது அல்ல. சம வேலைக்கு சம ஊதியச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் ,போன்ற சட்டங்களை அரசே மதித்து நடைமுறைப்படுத்தவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்ற வேண்டும்.காலிப்பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகமுறையில் பணியமர்த்தக்கூடாது,பெரும்பாலான பணியிடங்களை ஒப்பந்த,தற்காலிக,வெளிக் கொணர்வு முறையில் மட்டுமே நியமிப்பது கூடாது என்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துவது பணியாளர்களின் உரிமையாகும்.
சட்ட விரோத, தொழிலாளர் விரோத
நடவடிக்கைகளை அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அரசை விமர்சித்து கருத்துகளை கூறக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்புவது ஜனநாயக விரோதச் செயலாகும்.எனவே, இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
# தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். கட்டணக் கொள்ளையும், ஸ்ட்ரே கவுன்சிலிங்கும் , கட் ஆஃப் மதிப்பெண்ணை இறுதி நேரத்தில் குறைப்பதும் முறைகேடான மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்குகிறது.
இவற்றை தடுத்திட ஒன்றிய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் -2019 (NMC act 2019 ) ல் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
#அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான நிதி உதவியை அரசு உயர்த்திட வேண்டும்.
#அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.
#அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” என்று டாக்டர் இரவீந்திரநாத் வலியுறுத்தினார்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, டாக்டர் எஸ்.ஹேமாவதி, எஸ்.ரம்யா ஆகியோர் உடனிருந்தனர்.