பண்ருட்டி வேல்முருகன் 
தமிழ் நாடு

டிவிகே பெயர்- விஜய், வேல்முருகன் கட்சிகள் பஞ்சாயத்து!

Staff Writer

டிவிகே என்கிற பெயரை யார் வைத்துக்கொள்வது என்பதில் பண்ருட்டி வேல்முருகன், நடிகர் விஜய் ஆகியோரின் கட்சிகளுக்கு இடையே பிரச்னை எழுந்துள்ளது.  

விஜய் போட்டியிடும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளர் வேணுகோபாலுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 11ஆம் தேதி ஒரு நோட்டீசை அனுப்பியுள்ளது. அதில் ஆங்கிலத்தில் கட்சியின் பெயரை டிவிகே எனப் பயன்படுத்துவதற்கு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதற்கு பதிலளிக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி கீதாவிடம் அவர் விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது; 19-05-2014 அன்று தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருக்கிறோம். தனித்துப் போட்டியிட்டு கேமரா சின்னத்தில் எங்கள் தலைவர் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் 2024இல் ஆரம்பித்தார்கள். நாங்கள் ஆணையத்திடம் 16-05-2024இல் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பினோம். அவர்கள் டிவிகே என்பதைப் பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தோம்." என்றும் வேணுகோபால் கூறினார்.