தமிழ் நாடு

தனியார் பல்கலை. சட்டவரைவைத் திரும்பப்பெறச் சொல்லும் மு.வீரபாண்டியன்!

Staff Writer

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிதமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019- இல், தனியார் பல்கலைக் கழகம் அமைக்க தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவை என்ற சட்டப் பிரிவைத் திருத்தம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து, குறிப்பாக மாணவர் சேர்க்கை முறை, கல்விக் கட்டணம், துணைவேந்தர், இணை வேந்தர் நியமன முறை, ஆட்சி மன்றக் குழு போன்ற எல்லாவற்றிலும் அரசு விலகிக் கொள்ள, அல்லது விலக்கிவைக்க இந்தச் சட்டம் வழி வகுத்து விடும் என்பதை பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துக்கூறின.

இந்நிலையில் இதுகுறித்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும். தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல்கள்போல் தோன்றும் பேரபாயம் உருவாகும்.” என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளார். 

”இது குறித்து உயர் கல்வித்துறை நிபுணர்கள், மூத்த பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என பல தரப்பினரும் கூறியுள்ள கருத்துக்களை அரசு பரிசீலித்து, தனியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.” என்றும் வீரபாண்டியனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.