தமிழ் நாடு

தருமபுரியில் டிவி நிகழ்வில் மோதிக்கொண்ட அரசியல் கட்சியினர்!

Staff Writer

நியூஸ்தமிழ் தொலைக்காட்சி சார்பில் மாவட்டம்தோறும் சென்று மக்கள் மத்தியில் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் தேர்தல் விவாதங்களை நடத்திவருகின்றனர். திருவள்ளூரில் தொடங்கிய இந்த விவாத நிகழ்ச்சி, தருமபுரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 

அப்போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., தருமபுரி எம்.பி.  தி.மு.க.வின் மணி, நா.த.க. நிர்வாகி சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் தொகுப்பாளரும் அ.தி.மு.க.வினரும் ஆளும் கட்சி மீது விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர். 

பதிலுக்கு அ.தி.மு.க.வின் பழைய ஆட்சியின் குறைபாடுகளைப் பற்றி தி.மு.க. மணி குறிப்பிட்டார். 

விவாதம் மிகவும் சூடாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் நாற்காலிகளை எடுத்து வீசித் தாக்கத் தொடங்கினர். காவல்துறையினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

நிகழ்ச்சி இடையிலேயே நிறுத்தப்பட்டது.