தமிழ் நாடு

தலைமைச்செயலகம் கட்ட எப்படி தடை விதிக்கமுடியும்?- வழக்கு தள்ளுபடி!

Staff Writer

சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அதையடுத்து அவ்வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஜய் தலைமையிலான அரசாங்கம் தற்போதைய கோட்டை வளாகத் தலைமைச்செயலகத்துக்குப் பதிலாக, பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதென அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இதனிடையே, ஒன்பது மீனவ கிராம மக்களும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்த விவகாரத்தில், புதிய தலைமைச்செயலகம் கட்டத் தடைவிதிக்குமாறு சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழ்வேந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்வு இன்று அம்மனுவை விசாரித்தபோது, புதிய தலைமைச்செயலகம் கட்டக்கூடாது என உத்தரவிட எந்தச் சட்டத்தில் நீதிமன்றத்துக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது என்று கேட்டதுடன், விளம்பரத்துக்காகப் பொதுநலன் வழக்கு தொடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

பின்னர், மனுதாரர் தன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறியதை ஏற்று, நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.