காரைக்குடியில் சைக்கிளில் விஜய் 
தமிழ் நாடு

தாமதம்... காரைக்குடியில் பேசாத விஜய், தொண்டர்கள் ஏமாற்றம்!

Staff Writer

காரைக்குடியில் இன்று அறிவிக்கப்பட்ட விஜய்யின் பிரச்சாரம் சொன்னபடி நடைபெறவில்லை.

மதுரையில் இன்று தனி விமானத்தின் மூலம் சென்றிறங்கிய அவர், நான்கு மணி நேரத்துக்கும் மேல்ஆகியும் காரைக்குடியை அடையவில்லை. 

இடையில் உள்ள ஊர்களிலெல்லாம் மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றதால் 100 கி.மீ. தொலைவைக் கடக்க அவருடைய வாகனம் நெடுநேரம் எடுத்துக்கொண்டது. 

இதனால் அவரால் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் பிரச்சாரத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்று சேர முடியவில்லை.  

இதனிடையே, தாமதம் எனத் தெரிந்துமே வாகனத்தை விட்டு இறங்கி சில கி.மீ. தொலைவுக்கு முன்னர் மிதிவண்டியை ஓட்டியபடி சென்றார், விஜய். இதனால் அந்த வழியெல்லாம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விஜய் தள்ளாடி கீழே விழப் போக, உடன் வந்த பாதுகாவலர்கள் அவரை விழாமல் பிடித்துக்கொண்டனர்.

பிற்பகல் 2.30 மணிக்குள் அவரின் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால், அந்த நேரத்தில்தான் அவர் அங்கு சென்றபோதும் விதிப்படி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

அதையடுத்து, அனுமதி இல்லாமல் பேசினால் பிரச்னைகள் வரக்கூடும் எனக் கருதிய விஜய் கூட்டத்தில் பேசுவதைத் தவிர்த்தார்.

வேட்பாளர் பிரபுவை மட்டும் தன் வாகனத்தில் ஏற்றி அவரை அறிமுகம் செய்ததைப் போல விசில் ஊதி வாக்கு சேகரித்தார். 

ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை என அங்கு 5 மணி நேரத்துக்கும் மேல் திரண்டிருந்த த.வெ.க.வினர் ஏமாற்றம் அடைந்தனர். 

பின்னர், அங்கிருந்து சென்னைக்குச் செல்வதற்கான விமானத்தை அடைய அவர் திருச்சிக்குப் புறப்பட்டார். நாளை அவர் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார்.