தமிழ் நாடு

தி.மு.க. எதிரி, அ.தி.மு.க. என்ன?- விஜய்க்கு திருமா கேள்வி!

Staff Writer

தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கொள்கை எதிரிகள் எனக் கூறியுள்ள நடிகர் விஜய், அ.தி.மு.க.வை என்னவாகக் கருதுகிறது எனக் கேட்டுள்ளார், வி.சி.க. தலைவர் திருமாவளவன். 

சென்னை, விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

பா.ஜ.க.வுடன் சேர்ந்து செயல்படுவதாகக் கூறப்பட்ட விஜய், அரசியல் எதிரி, கொள்கை எதிரி - பா.ஜ.க., தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறியதுபற்றி கேட்டதற்கு, “ கொள்கை எதிரி பட்டியலில் அ.தி.மு.க. உண்டா இல்லையா என்பதை அவருடைய உரையில் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்து விஜய் கூறியிருப்பது இயல்புதான். அ.தி.மு.க.வைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லையே.. ஏன் எனும் கேள்வி எழுகிறது.” என்றார் திருமாவளவன். 

மீண்டும் அதே கேள்வியை அந்தச் செய்தியாளர் அழுத்தமாகக் கேட்டதற்கு, ”கொள்கை எதிரிகளாக தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அ.தி.மு.க.வை அவர் விமர்சித்திருக்கிறார். அந்தக் கட்சியும் கொள்கை எதிரிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக என்ற கருத்தைச் சொன்னதாகத் தெரியவில்லை.” என்று திருமா கூறினார்.   

பரந்தூர் விமானநிலையத்துக்காக பயிர்நிலம் எடுக்கும் விவகாரம் தொடர்பாக விஜய் மக்களோடு சேர்ந்து கோட்டைக்குப் போய் முதலமைச்சரைச் சந்திப்பதாகக் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ”எதிர்க்கட்சிகள் இதைப் பற்றி அரசிடம் பல முறை எழுத்துபூர்வமாக முறையிட்டும் அதை நடைமுறைப்படுத்தும் வேலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவருடைய போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருமானால் அதை வரவேற்கத் தயார்.” என்றார்திருமாவளவன்.