தி.மு.க. தன்னை நிராகரித்ததாக த.வெ.க.வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று த.வெ.க. தலைவர் விஜய்யைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்த சம்பத், பின்னர் செய்தி்யாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஆறு ஆண்டுகள் எந்தக் கட்சியிலும் இல்லாமல் திராவிட இயக்கப் பேச்சாளனாக தான் செயல்பட்டு வந்ததாகவும் விஜய்யைப் பற்றிப் பேசியதற்காக அறிவாலயத் தரப்பிலிருந்து தன்னை வசைச் சொற்களால் வசைபாடியதாகவும் அதனால் மனமுடைந்துபோனதாகவும் அவர் கூறினார்.
தி.மு.க. இளைஞரணி நடத்திய அறிவுத் திருவிழாவில் முதல் ஆளாகப் பேசியிருக்கவேண்டிய தன்னைப் புறக்கணித்துவிட்டதாகவும் அவர் குறைகூறினார்.
பா.ஜ.க. சார்புநிலையில் த.வெ.க. இருப்பதாகக் கூறுகிறார்களே என திராவிட இயக்கப் பேச்சாளராகப் பேசுவதாகச் சொல்கிறீர்களே என ஒருவர் கேட்டதற்கு, தானும் இதைப் பற்றி விஜய்யிடம் பேசியதாகவும் அதற்கு அவர், இங்கு அதிகாரத்தில் இருக்கும் கட்சியைக் கூர்ந்து விமர்சிக்கிறேன்; பா.ஜ.க.வைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் சம்பத் கூறினார்.
திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது பற்றிக் கேட்டதற்கு, அப்படிப் பேசாமல் இருப்பதுதான் விஜய்க்கு நல்லது என்றும் நாஞ்சில் சம்பத் பதில்கூறினார்.