மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை வகித்துள்ளார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் :
1. சிபிஐ(எம்), சிபிஐ கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட சட்டவிரோத உத்தரவு ! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம் !
இந்த சட்டவிரோத உத்தரவுக்கு வருவாய்த்துறை அமைச்சர், செயலாளர் பொறுப்பேற்கவும் வலியுறுத்தல் !!
நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கம், அது கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகள் ஆகிய காரணங்களால், நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள், போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் மற்றும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் வலுவாக போராடி வருகிறது. அரசு கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறது.
தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் 40 நாட்கள் வரையிலும் ஓரிடத்தில் அமர்ந்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் உட்பட்ட போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகளில் மிக முக்கிய நகரத்தின் மைய பகுதியில், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களின் கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற ஜனநாயக உரிமைகள், கோரிக்கைகளை முன் வைத்து நடத்தும் போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த போராட்டங்களை காவல்துறை மிக கடுமையாக ஒடுக்கும் செயலை அரங்கேற்றுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மறுக்கும் செயலாகும். அரசின் இத்தகைய ஒடுக்குமுறையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேற்படி அடக்குமுறையின் உச்சமாக, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தனது அதிகார எல்லை மற்றும் வரம்புகளை மீறி, சட்டத்திற்கு விரோதமாக, தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரிக்க சொல்லி, 18.08.2026 அன்று, ந.க.எண். (2017/2026/அ1) உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவின் நகலை, வட்டாட்சியர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர், தலைமையிடத்து துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர் உட்பட்ட உயர் அதிகாரிகள் மேற்படி சட்ட விரோத உத்தரவின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேற்படி உத்தரவை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சிபிஐ(எம்) சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்படி வட்டாட்சியர் பயிற்சி முடிந்துவிட்டது என மாவட்ட ஆட்சியர் 18.08.2026 பிற்பகலில், தனியரை மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவு வெளியிட்டு உள்ளார். மேற்படி வட்டாட்சியர் செயல் கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று என ஜனநாயகக் குரல்கள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை, ஜனநாயகப் படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் மாநில வருவாய் துறைக்குள் இருக்கும் ஜனநாயக விரோத கருப்பு ஆடுகளின் செயலாக தெரிகிறது.
மாநில முதல்வரின் கவனத்திற்கு மேற்படி பிரச்னை எடுத்துச் செல்லப்பட்ட பின்னரும், மாநிலம் முழுவதும் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இது குறித்து விவாதித்து வரும் நிலையிலும், மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் இருந்து விடுவித்ததாக அறிக்கை வெளியிட்டிருப்பது, மாநில ஆட்சியாளர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அளிக்கும் வழிகாட்டுதல் மீது சந்தேகம் வலுவாக ஏற்படுகிறது. ஆட்சியரின் செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த சட்டவிரோத மற்றும் அத்துமீறலுக்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்; சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2:
போராடும் உரிமையை மறுக்கவும், இடதுசாரி கட்சியினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட கல்வித்துறை சுற்றறிக்கைக்கு சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!
கல்லூரிக் கல்வி ஆணையர் 17.08.2026 தேதியிட்டு, அரசு கடித ந.க எண். 1075/அ1/2026-1, 14.08.2026 என்பதை பார்வை என குறிப்பிட்டு, ஒரு உத்தரவை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார். இந்த உத்தரவு, பார்வையில் குறிப்பிட்ட அரசு கடிதத்தில், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி உட்பட்ட ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில், மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கெடுப்பதை, தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே, துறை இடைத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுத்த விவரங்களை தெரிவிக்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
14.08.2026 தேதியிட்ட அரசின் சிறப்புச் செயலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய கடிதம், மேற்படி உத்தரவை கல்லூரி கல்வி ஆணையருக்கு வழங்கியுள்ளது. ஜூலை மாத சட்ட ஒழுங்கு குறித்த பரிசீலனையின்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய்குமார் ஐ.ஏ.எஸ் வலியுறுத்தியதாக உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரகம் இவை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது என்ற அரசின் சிறப்பு செயலாளருடைய கேள்வி மிகத் தீவிர தன்மையுடன் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.
தலைமைச் செயலாளரும் கலந்து கொண்ட கூட்டத்தில் போராடும் உரிமை மறுக்கப்படுவது, கல்வி நிலையங்களுக்குள் காவல்துறை அத்துமீறி செல்வதை அனுமதிக்கும் வழிகாட்டுதல் வழங்கியிருப்பது மிகக் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகும்; அனைத்தும் திட்டமிட்டு நடந்த செயலாகும். எனவே, தலைமைச் செயலாளர் உட்பட்டு அதிகாரிகள் பங்கெடுத்து நடந்த பரிசீலனைக் கூட்டத்தின் இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இடதுசாரி கட்சியினரையும், இதர ஜனநாயக நடவடிக்கைகளையும் குறிவைத்து ஒடுக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் உருவானது? தலைமைச் செயலாளர் எப்படி அமைச்சரவைக்கு அல்லது முதலமைச்சருக்கு தெரியாமல், இதுபோன்ற மிகப்பெரிய முடிவுகளை எடுத்திருப்பார் என்பன போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுவது இயற்கையானதாகும்.
19.08.2026 அன்று மீண்டும் கல்லூரிக் கல்வி ஆணையர் ஒரு கடிதம் மூலம் மேற்படி உத்தரவை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனாலும், மேற்படி உத்தரவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.
இத்தகைய வழிகாட்டுதலை வழங்கிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும்; எதிர்வரும் காலத்தில் இது போன்ற ஜனநாயகப் பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்திட வேண்டும். ” என்று பெ.சண்முகம் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.