த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்துக்கு முந்தைய நிகழ்ச்சியாக மக்களைச் சந்திக்கும் சாலை உலாவைத் தொடங்குகிறார். இதற்காக சென்னையிலிருந்து காலையில் தனி விமானம் மூலம் அவர் திருச்சிக்குப் போய்ச்சேர்ந்தார்.
விமான நிலையத்தில் போய் இறங்கிய விஜய், அங்கிருந்து மரக்கடை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
10.30 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போதுவரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விஜய்யின் பரப்புரைப் பேருந்து தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்து செல்வதைப் போல மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி செல்கிறது.
முன்னதாக, விமான நிலையத்தில் சென்று இறங்கிய விஜய்யைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான தொடண்டர்களும் இரசிகர்களும் திரண்டிருந்தனர்.
காவல்துறையினரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் துணை இராணுவப் படையினரும் கூடுதலாகக் குவிக்கப்பட்டிருந்தனர். அதையும் மீறி தடுப்புகளைத் தாண்டி, தள்ளிவிட்டு த.வெ.க.வினர் முன்னேறிச் சென்றனர்.
பெண் தொண்டர் ஒருவர் மயக்கம் அடைந்ததை அடுத்து, உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 108 வாகனத்தில் அனுப்பிவைத்தனர்.