தமிழ் நாடு

திருவண்ணாமலையில் 3ஆவது வேளாண்மைக் கண்காட்சி தொடக்கம்!

Staff Writer

திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025’  விழாவில் கண்காட்சி அரங்குகள், கருத்தரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் தொடங்கிவைத்தார்.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், நவீன பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்களை உழவர்கள் கடைப்பிடித்து, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை எதிர்கொண்டு குறைந்த பரப்பில் அதிக உற்பத்தி செய்யவேண்டிய நிலையில் அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையிலும், இயந்திரங்கள் பயன்பாடு, விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி செய்தல் போன்றவற்றிற்கான விவரங்களை விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் ஒரே இடத்தில் வழங்கிடுவதில் வேளாண் கண்காட்சிகளும் கருத்தரங்குகளும் முக்கியப் பங்காற்றுகின்றன.

வேளாண்மை-உழவர் நலத் துறையால் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.  அவ்வகையில், இந்த ஆண்டின் முதல் ’வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்’ 11.06.2025 முதல் 13.06.2025 வரை ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் விஜயமங்கலத்திலும்,

இரண்டாவதாக ’வேளாண் வணிகத் திருவிழா’ 27.09.2025 முதல் 28.09.2025 வரை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்திலும் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் மூன்றாவது நிகழ்வாக  இன்றும் நாளையும் திருவண்ணாமலையில் கண்காட்சி நடத்தப்படுகிறது.  

வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், பாரம்பரிய இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு  போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்களிடையே கொண்டுசேர்த்திடும் வகையில் இக்காட்சி நடைபெறுகிறது.