திருவாரூரில் சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்கள் மீது சட்டவிரோதமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்; அவர்கள் வீட்டுப் பெண்களையும் துன்புறுத்தியுள்ளனர் என்று புகார் எழுந்துள்ளது.
"திருவாரூர் நகரில் ஆட்டோ தொழிலாளர்கள் வாகனத்தை நிறுத்துவது குறித்த பிரச்சனையில் திருவாரூர் நகர காவல்துறை அத்துமீறி தொழிலாளர்கள் மீது ஒரு மாதத்திற்கு முன்பு தாக்குதல் நடத்தியது இதை தடுக்க சென்ற சிஐடியு மாவட்ட செயலாளர் கே.எம்.அனிபா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களையும் காவல்துறை தாக்கியது சம்பவத்தை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான சிஐடியு மாவட்ட செயலாளர் கே.என்.அனிபா மற்றும் சங்க நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். ஒரு மாதம் கடந்த நிலையில் 18.11.2025 அன்று அதிகாலை 3.30மணியளவில் கிரிமினல் குற்றவாளிகளை போல் கைது செய்து உள்ளது. கைதுசெய்யும் போது வீட்டில் இருந்த பெண்கள் உட்பட்ட அனைவரையும் துன்புறுத்தியுள்ளது." என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சுகுமாறன், பொதுச்செயலாளர் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
”சிஐடியு மாவட்ட செயலாளர் கே.என்.அனிபா மற்றும் 6 தோழர்கள் மீது 7 பிரிவுகளில் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிணையில் வர இயலாத வகையிலான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. திருவாரூர் மாவட்ட காவல் துறையின் தொழிலாளர் மற்றும் சிஐடியு விரோத அராஜக நடவடிக்கையை சிஐடியு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் தமிழ்நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. இந்த கண்டன இயக்கத்தில் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்களும் பெரும் திரளாக பங்கெடுத்து காவல்துறையின் அராஜகத்தை கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
மாநில காவல் துறை தொழிலாளர்கள் மீது வன்மமான முறையில் நடந்துகொள்வதை கைவிட வேண்டும். 17.11.2025 சாம்சங் தொழிலாளர்கள் சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் நடைபயண பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதைபோல் நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிஐடியு மாவட்ட மாநாடு மற்றும் போராட்ட நிகழ்வுகளின் போது காவல் துறை அனுமதி வழங்கி பின்னர் திடீரென ரத்து செய்துள்ளது. இதை நேரிடையாக தொழிற்சங்க தலைவர்களிடம் வழங்காமலும், போன் மூலம் தகவல் தெரிவிக்காமலும், இரவு 11 மணி அளவில் சிஐடியு அலுவலக கதவில் அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு அறிவிப்பை ஒட்டி சென்றுள்ளனர். இது ஜனநாயக செயல்பாடுகளுக்கு எதிரானது. தொழிலாளர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவதை அனுமதிக்காத தொழிலாளர் விரோத போக்காகும். மேற்படி மாவட்டங்களில் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, மாநில உள்துறை நிர்வாகம் தொழிலாளர் ஜனநாயக ரீதியில் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதை கைவிட வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தி தொழிலாளர் போராட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.” என்றும் சிஐடியு சுகுமாறன், கண்ணன் இருவரும் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.