“தீபம்” ஏற்றும் நாள் உறுதியாக வரும் என தாம் நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசியிருப்பது சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கார்த்திகை தீபம், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் தர்கா அருகே உள்ள நில அளவைக் கல்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டவர் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். இது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் மயிலாடுதுறை தேரெழுந்தூரில் கம்பர் விழாவில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நேற்று பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசியதாவது: எனக்கும் இந்த தீபத்துக்கும் என்ன பொருத்தம்னு தெரியலை.. இங்க குத்துவிளக்க ஏத்தப் போறாங்கன்ன உடனே, ஆஹா, ‘தீபத்தை’ ஏத்தப் போறோம்னு கிளம்பினேன்.. உடனே, “அய்யா நீங்க ஏத்தக் கூடாது அய்யா.. உங்களை ஏத்த அனுமதிக்கமாட்டேன் அய்யா.. நீங்க உங்க இடத்துல உட்காருங்கய்யா”ன்னு தடுத்துட்டாங்க.. ரொம்ப ஏமாற்றமாக போய்விட்டது.. சரி பரவாயில்லை.. தீபம் ஏற்றும் நாள் வரும்னு உறுதியாக நம்புறேன்.. நம்முடைய சமய அடையாளங்களை உடம்பில் தரித்துகொள்ள கூச்சமே படக்கூடாது.” இவ்வாறு ஜிஆர் சுவாமிநாதன் பேசினார்.
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை நீடித்து வரும் நிலையில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.