அன்புமணி 
தமிழ் நாடு

தோல்வி பயத்தின் வெளிப்பாடு - அன்புமணி

Staff Writer

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைத்தது தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் கூட ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பாமரர்களுக்குக் கூட தெரிந்த உண்மை. முதலமைச்சருக்கும் இது தெரியும். ஆனாலும், தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தமாக பணத்தைக் கொடுத்தாவது மக்களின் எதிர்ப்பைக் குறைக்க முடியுமா என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முயற்சியை செய்திருக்கிறார்.

உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட வில்லை. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதை அறிந்து கொண்டு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தை திமுக அரசு அரைகுறையாக செயல்படுத்தினார்கள்.


அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த திமுக, 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கி விட்டு, மீதமுள்ள 1.10 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது.

எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ, அப்போதெல்லாம் நிதி நெருக்கடியைக் காரணம்  காட்டி பொங்கல் பரிசு வழங்க மறுப்பதும்,  தேர்தல் வந்து விட்டால் அந்த ஆண்டில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதும் திமுகவின் கபட நாடகங்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்று பா.ம.க. அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் நானும் அறிவிப்பை வெளியிடுகிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உழவர்களுக்கான கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மின் கட்டணம் குறைப்பு  உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி செயல்படுத்த மறுத்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே வாங்கிக் குவித்திருக்கும் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் போதாதென கூடுதலாக ரூ.6,550 கோடியை கடனாக வாங்கித் தான் இந்தத் தொகையை வழங்கியுள்ளார். இந்தத் கடனும் தங்கள் தலையில் தான் விழும்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கூடுதலாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 இலட்சத்தைப் பறித்துக்கொண்டு ஒரே முறை ரூ.5 ஆயிரத்தை வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.