மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் மாடுகளுக்கு இடம் கிடைக்கிறது; திருநங்கைகள் வளர்க்கும் மாடுகளுக்கு இடம் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பல மாவட்ட ஆட்சியர்களிடம் சில ஆண்டுகளாக மனு கொடுத்தும் பலனில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
தனி நபர் ஜல்லிக்கட்டில்கூட தங்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது; ஆனால் அரசு நிர்வாகம் நடத்தும் ஜல்லிக்கட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கள் மாடுகளுக்கு அனுமதி கிடைப்பதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குலுக்கல் என்று சொல்கிறார்கள்; ஆனால், நடிகர்கள், தொழிலதிபர்கள், பெரிய ஆட்கள் என்றால் டோக்கன்கூட மேலே வந்துவிடும்போல என ஆதங்கப்பட்டனர்.
திருநங்கைகள் மொத்தம் 20 ஜல்லிக்கட்டு மாடுகள் இருந்தும் தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் அவர்கள் குறைகூறினர்.
நடிகர் சூரியின் மாடு 50 மாடுகளில் இடம் கிடைப்பதாகவும் அவர்களில் ஒருவர் கூறினார்.
துணைமுதலமைச்சர் உதயநிதியின் காலில் விழுந்து கேட்டபோது, திருநங்கைகளுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறினார்கள் ஆனால் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்றும் திருநர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.