எதையும் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்க்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், மணிப்பூர் விவகாரத்தைத் தொட்டுக்காட்டினார். பா.ஜ.க. மீது பெரிய அளவில் தாக்கிப் பேசாதபோதும் அவரை பா.ஜ.க. ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் இன்று ஊடகத்தினரிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, கருத்துக்கூறுவதற்கு முன் தெரிந்துகொண்டு விஜய் பேசவேண்டும் என்றதுடன், மணிப்பூரில் நடப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரை அழைத்துச்செல்லத் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
”அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதற்கு வேறு ஆள்களே இல்லையா? ஆனந்த் தெல்தும்டே ஒரு நகர்ப்புற நக்சலைட்டு. அவருக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் விகடன் மேடை அமைத்துத்தந்தது ஏன்?” என்றும் அண்ணாமலை கேள்விகள் எழுப்பினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு யார் தலைவர், திருமாவளவனா, ஆதவ் அர்ஜூனா? திருமாவளவன் போகாத நிகழ்ச்சிக்கு ஆதவ் எப்படிப் போகமுடியும்? அவர் மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன் என்றும் அண்ணாமலை சரமாரியாகக் கேட்டார்.