தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமே இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருக்க, கோவை இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட சமூக ஊடகப்பதிவு இந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கியுள்ளது.
இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தென்னகத்தின் மான்செஸ்டரை பெண்களை சூறையாடும் மான்ஸ்டர்கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை! தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே! வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு!’ என்று விமர்சித்துள்ளார் அவர்.
அவரின் இந்த பதிவைத் தொடர்ந்து, இந்த இச்சம்பவம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் அளித்த விளக்கத்தில், “இருகூர் அருகே வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் அலறல் சப்தத்துடன் சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல் துறையினருக்கு 100க்கு அழைத்து தகவல் அளித்துள்ளார்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள். அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம். சூலூரில் இருந்து வந்த ஒரு வாகனம் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது, ஒரு காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது.
பெண் காணவில்லை என்பதுபோல இதுவரை புகார் எதுவும் வரவில்லை. வாகனத்தின் பதிவு எண் எந்த ஒரு இடத்திலும் தெளிவாக புலப்படவில்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.” என்றார்.
கோவை பகுதியில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.