நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் 02.08.2025 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்கள் ஆகஸ்ட் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை ஓராண்டுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதுவரை 407 முகாம்கள் நடத்தப்பட்டு, 6,37,089 பேர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர்.
இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்தும், மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளும் வகையில் பத்து வகையான சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் இப்போட்டிகளை நடத்துகிறது.
1. உயிர்காத்த முகாம் - உங்கள் உண்மை அனுபவத்தைப் பகிருங்கள்!
"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமில் கலந்துகொண்டதன் வாயிலாக நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் பெற்ற நன்மைகளை, உங்கள் உண்மையான அனுபவமாகப் பகிரலாம். சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டது, சரியான மருத்துவ ஆலோசனை கிடைத்தது அல்லது பெரிய மருத்துவச் செலவிலிருந்து தப்பியது போன்ற அனுபவங்களை உணர்வுப் பூர்வமாகப் பதிவு செய்யலாம்.
படைப்பு வடிவம்:
• ரீல்ஸ்: ஒரு நிமிடத்திற்குள் அடங்கும் வகையில் ஒரு காணொலி. இதில், உங்கள் அனுபவத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்க வேண்டும்.
• கட்டுரை: ஒரு பக்கக் கட்டுரை. இதில், உங்கள் அனுபவத்தின் அனைத்து விவரங்களையும், அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தையும் விரிவாக எழுதலாம்.
2. ஆரோக்கியத்தின் திருவிழா- புகைப்படப் போட்டி
"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு மக்கள் பயனடையும் விதத்தையும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையையும், முகாமின் நேர்மறைச் சூழலையும் வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும். ஒரு புகைப்படம், ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை நிரூபிக்கும் சிறந்த படைப்புக்கு பரிசுகள் உண்டு.
முகாமின் செயல்பாடுகளைக் கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திட்டத்தின் தாக்கம் மற்றும் பயன்களை மக்களுக்கு உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம்.
3. உண்மைக்கு உயிர்கொடு - குறும்படப் போட்டி:
"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமால் பயனடைந்த ஒருவரின் உண்மைக் கதையை 3 முதல் 5 நிமிடங்களுக்குள் குறும்படமாக உருவாக்க வேண்டும்.
இதில் பயனாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முகாம் மருத்துவர்களின் நேர்காணல்களைச் சேர்த்து, திட்டத்தின் தாக்கத்தை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்யலாம்.
4. வரிகள் பேசட்டும் - விழிப்புணர்வு முழக்கம் :
"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமைப் பற்றியும், வருமுன் காப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் வலிமையான விழிப்புணர்வு முழக்கங்களை (Slogans) எழுதி அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: "உங்கள் உடல்நலம், உங்கள் கையில்!"
5. அறிவோடு விளையாடு : வினாடி வினா போட்டி:
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள், நோய்த்தடுப்பு மருத்துவம் மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வு பற்றிய உங்கள் அறிவைச் சோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு.
இது வெறும் போட்டியல்ல, மாறாக மக்கள் தங்களின் ஆரோக்கியம் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளும் ஒரு ஊடகமாக இந்தப் போட்டி அமைகிறது.
6. பாரம்பரியமும் ஆரோக்கியமும் - சமையல் போட்டி :
மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், சத்தான மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை எளிமையான முறையில் சமைத்து, அதன் செய்முறை விளக்கத்தை 1 நிமிட ரீல்ஸ் ஆக பகிர வேண்டும்.
பாரம்பரிய தானியங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எவ்வாறு அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை இந்த வீடியோக்கள் வாயிலாக விளக்கலாம். இது பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
7. எண்ணங்களும் - வண்ணங்களும் - ஓவியப் போட்டி
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கலை வடிவமாக வெளிப்படுத்தும் தனித்துவமான ஓவியப் போட்டி இது.
கருப்பொருள்கள்: "ஆரோக்கியமான தமிழ்நாடு"
இந்தக் கருப்பொருள்களில் உங்கள் எண்ணங்களை வண்ணங்களாலும் கோடுகளாலும் படைக்கலாம்
8. உங்களின் உரத்த குரல் - பாட்காஸ்ட் போட்டி:
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், அதன் தாக்கம் பற்றிய தகவல்களையும் 2 நிமிடங்களுக்குள் பாட்காஸ்ட்டாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
இந்தத் திட்டத்தைப் பற்றிய உங்கள் தனிப்பட்ட கருத்துக்களைப் பேசலாம் அல்லது பயனாளிகள் மற்றும் மருத்துவர்களின் நேர்காணல்களைப் பதிவு செய்யலாம். இது கேட்பவர்களுக்குத் திட்டத்தின் பலன்களை விரிவாகப் புரிய வைக்கும்.
9. மக்கள் குரல்: அடுத்த சுகாதாரத் திட்டம் என்ன?
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் வழியில், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரத் துறையில் நீங்கள் காண விரும்பும் அடுத்த முக்கியத் திட்டம் என்ன? அல்லது தற்போதைய திட்டங்களில் (எ.கா: காப்பீட்டுத் திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்) நீங்கள் அவசியம் செய்ய வேண்டும் என்று கருதும் முக்கிய மேம்பாடுகள் யாவை? என்பது குறித்த உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
எவ்வாறு அனுப்ப வேண்டும்? உங்கள் திட்ட யோசனையைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கும் வகையில், அதிகபட்சம் 500 வார்த்தைகளுக்குள் ஒரு பத்தி (Paragraph) வடிவில் எழுதி அனுப்ப வேண்டும்.
10. வண்ணங்களில் விடியல் - போஸ்டர் வடிவமைப்பு போட்டி!
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் முக்கியத்துவத்தை, வருமுன் காக்கும் மருத்துவத்தின் தேவையை, அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில், உடனடி தாக்கம் செலுத்தும் சுவரொட்டிகளை(Posters) வடிவமைக்கவும்.
படைப்பு வழிகாட்டி:
எளிமையான கிராபிக்ஸ் மற்றும் வலிமையான, கவர்ச்சியான வாசகங்களைப் (Slogans) பயன்படுத்துங்கள்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் படைப்புகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் 05/12/2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
1. மின்னஞ்சல்: உங்கள் படைப்புகளை tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
2. விரைவுத் துலங்கல் குறியீடு (QR Code): கீழே உள்ள [QR Code] குறியீட்டை ஸ்கேன் செய்தும் உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.
3. வாட்ஸ் அப் எண் (Whatsapp No): ஊடக மையத்தின் வாட்ஸ் அப் எண் 9498042408-க்கு ஒரு 'ஹாய்' (Hi) அனுப்பி இணைப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” என்று செய்தித்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.