தேவநாதன்  
தமிழ் நாடு

நிதி மோசடி - தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின்!

Staff Writer

நிதி நிறுவன மோசடி தொடர்பாக வின் டிவி ஊடக அதிபர் தேவநாதனுக்கு இடைக்காலப் பிணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை, மயிலாப்பூரில் நிதி நிறுவனம் ஒன்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டியவர்களிடம் பணத்தைத் திரும்பத் தராமல் தேவநாதன் மோசடியில் ஈடுபட்டார். தலைமறைவாக இருந்த அவர் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 

பணம் கட்டி ஏமாற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொருளாதாரக் குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் புகார் அளித்தனர். அதன்படியான வழக்கில் அவர் சிறையில் இருந்துவருகிறார். இடையே பல முறை அவர் சார்பில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இந்த நிலையில், சிறைவாசம் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில், தனக்குப் பிணை வழங்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் அவரின் சார்பில் மூன்று முறை மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. 

அண்மையில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவநாதனுக்கு அடுத்த மாதம் 30ஆம் தேதிவரை இடைக்கால ஜாமின் அளிக்க உத்தரவிட்டார். 

அதுவரை திங்கட்கிழமைதோறும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30ஆம்தேதிக்குள் இதே நீதிமன்றத்தில் 100 கோடி ரூபாயைச் செலுத்துமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.