தமிழ் நாடு

நீலகிரி நிலச்சரிவுக்குக் காரணம் என்ன?- சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட தகவல்!

Staff Writer

நீலகிரி மாவட்டம் பர்லியாரில் கடந்த 23ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் தமிழ் நாடு அரசின் அலட்சியமுமே காரணம் எனத் தெரியவந்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள அபாயங்களை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே தனது விரிவான கள ஆய்வில் சுட்டிக்காட்டியிருந்தும் கூட உரிய முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு குறித்த சில விவரங்களுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கை விவரம்:

“ நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அக்டோபர் 23ஆம் தேதி பெய்த பெருமழை காரணமாக ஊட்டி மலைப்பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 24.10.2026 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 செ.மீ., கீழ் கோத்தகிரியில் 20 செ.மீ., குன்னூரில் 17 செ.மீ., மேட்டுப்பாளையத்தில் 15 செ.மீ. என பெருமழை பதிவாகியது. 

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அக்டோபர் 23ஆம் தேதி நள்ளிரவு பர்லியார் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் 6 முதல் 8 பேர் பயணித்தாகக் கூறப்படும் அரசுப்பேருந்து ஒன்று சிக்கியது. நள்ளிரவு 12 மணிக்குப் பழுதின் காரணமாகச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது மலையிலிருந்து சரிந்த மண் குவியல், பாறைகள், ஒடிந்த மரங்கள் மற்றும் வேர்கள்  பேருந்தையே மூடின. அப்பேருந்தின் ஓட்டுநர் கனகராஜ் சடலமாகவும். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் பேருந்து நடத்துனர் கேசவன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

அன்றைய நாள்  உதகமண்டலம், கோத்தகிரி மற்றும் குன்னூர் வட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட மிதமான வாய்ப்பு உள்ளது என்றும் அடிகரட்டி,பர்லியார், உபதலை, கேத்தி, வண்டிச்சோலை, குஞ்சப்பனை, ஜக்கனாரை, நடுஹட்டி, ஜெகதளா, கெங்கரை, நடுவட்டம், நஞ்சநாடு, தொட்டபெட்டா, தும்மனட்டி மற்றும் காக்குச்சி ஆகிய கிராமங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்கிற  எச்சரிக்கையை Rainfall Induced Landslide Forecast Bulletin வாயிலாக GSI வழங்கியிருந்தது.

2023-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்திலும் பர்லியார் மற்றும் ஊட்டி மலைப்பாதைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் இப்பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு நிலச்சரிவு அபாய வரைபடங்களையும் நிலச்சரிவு மேலாண்மை வரைபடங்களையும் தயாரித்தது. கள ஆய்வு நடத்தப்பட்ட இடங்களில் உள்ள சரிவுகள் ஏன் ஆபத்தானவையாக மாறின. என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் அச்சரிவுகளில் நிலச்சைவைத் தடுக்க முடியும் உள்ளிட்ட பரிந்துரைகளையும் GSI வழங்கியிருந்தது.

பர்லியார் மண்டலத்தில் தேசிய நெடுஞ்சாலை 181ன் 5 கி.மீ. தூரப் பகுதிகளை 5 பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் அபாயங்களை GSI குறிப்பிட்டிருந்தது. அதில் அக்டோபர் 23ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி 5வது பிரிவுக்குள் வருகிறது. இதை அதிக அபாயமிக்க பகுதி என சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளது GSI.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் BIS விதிமுறைப்படி எந்த ஆதரவு அமைப்பும் இல்லாமல், அளவுக்கு மீறிச் சரிவுகளை வெட்டியதும் அதன்  அபாய நிலைக்குக் காரணம் என்றும் அப்பகுதியில் சாலை மட்டத்தின் கீழே அருகிலுள்ள நீரோட்டத்தின் அரிப்பும், wedge failure உம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சாலையில் விரிசல்களும் பெரும்பாலான வாய்க்கால் பாலங்கள் (culverts) அடைபட்டும் சேதமடைந்தும் இருப்பதாக GSI குறிப்பிட்டுள்ளது. இச்சலையானது 23 நவம்பர் 2023 அன்று பெய்த பெருமழையால்  3 நாட்கள் மூடப்பட்டிருந்ததாகக் குறிப்பிடுகிறது GSI.

பாறைச்சரிவு பகுதி A-A’ என வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில்தான் அக்டோபர் 23ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு குறுகிய சாலை இருப்பதால் தடுப்புச் சுவர் (retaining wall), கேபியன் சுவர் (gabion wall) கட்டுவது கடினம் என்பதால் கம்பி வலை + ஷாட்கிரீட் (wiremesh with shotcrete), பாறை போல்ட்/நங்கூரங்கள் (rock bolts/anchors), பாறை தடுப்பு வலை (boulder catching net)ஆகியவற்றைச் சேர்த்துச் சரிவை வலுப்படுத்த வேண்டும் என GSI தனது பரிந்துரைகளை வழங்கியிருந்தது. வாய்க்கால் பாலங்களைப் பழுது பார்த்துச் சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் சீராக வெளியேற புதிய வாய்க்கால் பாலங்கள் அமைக்க வேண்டும் என்றும் GSI தெரிவித்திருந்தது. சரிவு மிகச் செங்குத்தாகவும் சாலை மிகக் குறுகலாகவும் இருப்பதால், நிரந்தரத் தீர்வுகளைப் பரிந்துரைக்க பெரிய அளவிலான புவிதொழில்நுட்ப ஆய்வு (geotechnical investigation) மேற்கொள்ள வேண்டும் என்றும் GSI பரிந்துரைத்திருந்தது. பிரிவுகள் 1 முதல் 4 வரை பாதுகாப்பற்ற பெரிய வெட்டுச்சரிவுகளில் புதிய தடுப்புச் சுவர்கள் கட்ட வேண்டும். ஏற்கனவே உள்ள சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். செடிகள் நடுதல், உயிரிப் பொறியியல் (bio-engineering) நடவடிக்கைகளையும், சாலை அரிப்பைத் தடுக்க அடிப்பகுதி வடிகால் (toe drainage) அமைப்பதையும் பரிசீலிக்கலாம் என GSI தெரிவித்திருந்தது.

Google Map Street View மூலம் விபத்து நடைபெற்ற பகுதியில் செப்டம்பர் மாத படங்களைப் பார்த்தபோது GSI பரிந்துரைத்த தீர்வுகள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்படவில்லை என அறிய முடிகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் GSIயின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏன் உரிய முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்பதை விளக்க வேண்டும்.

1. GSIயின் பரிந்துரைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பெற்றிருந்தனரா? அப்படிப் பெற்றிருந்தால் அதன்மீது என்ன தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

     2.          மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் இப்பகுதி நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியாகப் பட்டியலிடப்பட்டுள்ளதா?

     3.          கனமழையின்போது இங்கு போக்குவரத்தை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த ஏதேனும் நெறிமுறை உள்ளதா? சம்பவம் நடந்த நாளில் அது பின்பற்றப்பட்டதா?

     4.          சம்பவத்திற்கு முன்பு மழை எச்சரிக்கைகள் பெறப்பட்டனவா? ஓட்டுநர்களுக்கும் பேருந்து இயக்குநர்களுக்கும் அவை எவ்வாறு தெரிவிக்கப்பட்டன?

     5.          அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறதா? அதன் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படுமா?

     6.          உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு என்ன உதவி வழங்கப்பட்டுள்ளது? தற்போது எடுக்கப்பட்டு வரும் இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளாக என்ன ?

பேரிடர்களைத் தடுப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கூட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ் நாடு அரசின் அலட்சியத்தால், ஒரு உயிரை இழந்தது கொலைக்குச் சமமானது. மேலே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குத் தமிழ் நாடு அரசும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் பதிலளிக்க வேண்டும்.

பர்லியார் மட்டுமின்றி ஊட்டியின் பல இடங்களிலும், கொடைக்கானலில் சில இடங்களிலும் இதேபோன்ற கள ஆய்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு பரிந்துரைகளை GSI வழங்கியிருந்தது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளத் தமிழ் நாடு அரசு முன்வர வேண்டும்.

GSI நாள்தோறும் வெளியிடும் நிலச்சரிவு முன்னெச்சரிக்கைகளை  (Rainfall Induced Landaslide Forecast Bulletin) TN-Alert செயலி மூலம் பொதுமக்களுக்கும் தமிழ்நாடு அரசு கொண்டுசெல்ல வேண்டும்.” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.