தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் இந்தியில் ஊர்ப் பெயர்கள் தீட்டப்பட்டதற்கு, தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ”இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'யூ டர்ன்' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில இன்ப்ளூயென்சர்களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இரு மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க் கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திலிருந்து நாசரேத்துக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் (எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.” என்றும்,
”கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்கமுடியாது. இதன் பின்னணி என்ன? யார் காரணம் என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டி பலகைகளில் இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.