”நாம் தமிழர் கட்சியோடு எங்களுக்கு அரசியல் ரீதியாக ஏராளமான முரண்பாடுகள் உண்டு. ஆனால் பொதுவாழ்வில் இருக்கிற ஒரு பெண்ணாக நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் திருமிகு.கார்த்திகா கைது செய்யப்பட்டதை அவசியம் கண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருக்கின்ற ஒரு பெண்ணை முறையான காரணத்தைக் கூட தெரிவிக்காமல் இரவு உடையில் கைது செய்து அழைத்துவர வேண்டிய அவசியம் என்ன? இதே அளவுகோல்தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா?” என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்விகளை அடுக்கியுள்ளார்.
”நேற்று தோழி ஒருவர் சென்னை மேயர் திருமிகு. பிரியா ராஜன் குறித்து ஒருவர் எழுதியிருந்த பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவ்வளவு ஆபாசமான, அருவருக்கத்தக்க பதிவு. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் அவர். அவர் அந்தப் பொறுப்பிற்கும், தீவிர அரசியலுக்கும் புதியவர். அதையெல்லாம் தாண்டி அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தால் நாகரிகமாக பொதுவெளியில் வையுங்கள். அவர் பதில் சொல்வார். அதை செய்யாமல் அவ்வளவுபச்சையாக பொதுவெளியில் ஒரு பெண்ணைப் பேசியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?இப்பொழுது அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
நேற்று முதலமைச்சரைப் பற்றி ஒரு பெண் மேடையில் மோசமாகப் பேசுகிறார். திருமிகு. கனிமொழி மேடையிலேயே அதைக் கண்டித்தார். பெண் ஒரு ஆணைப்பற்றி ஆபாசமாகப் பேசினாலும் அது தவறுதான்.
அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லாத திருமிகு. திரிஷா போன்ற பலர் அரசியல் காரணங்களுக்காக தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . முதலமைச்சரின் தாயார் கூட விதிவிலக்கில்லை.
பொதுவாழ்வில் இருக்கிற பல பெண்கள் தொடர்ந்து இம்மாதிரியான ஆபாசத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறோம். அப்படிப்பட்ட பேச்சுகள், பேசுபவரின் தரத்தைக் குறிக்கிறது. அவர்கள் தான் வெட்கித்தலைகுனிய வேண்டும். நாங்கள் அல்ல என்ற தெளிவோடு நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்.
ஆனால் தொடர்ச்சியாக அரசியலில் இதுபோன்ற ஆபாசப் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆபாசமான பேச்சுகள் அரசியல் விமர்சனம் அல்ல. அது பேசுகிறவர்களின் வக்கிர மனநிலையையே பிரதிபலிக்கிறது. இதை இப்படியே கடந்து போய்க்கொண்டே இருக்க முடியாது. பொதுவாழ்வில் இருக்கிற பெண்கள் பொது சொத்துக்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் கண்ணியமான தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. அதை சிதைக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை.
பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் நேர் நின்று பேச முடியாத ஆபாசமானபேச்சுக்களைப் பேச, பேசி விட்டு தப்பித்துக்கொள்ளசமூக ஊடகங்கள் ஒரு வசதியான இடமாகிவிட்டன. ஆபாசமான, அருவருப்பான கருத்துகளை நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம்.(We are normalising the obscene vulgar comments)இது நமது எதிர்காலத் தலைமுறைக்குச் செய்கிறமிகப்பெரிய கெடுதல். இதை கண்டும் காணமல் போவதும், தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதும் (Selective Opposition), அரசியல் கட்சிகளைச் சார்ந்த நபர்கள் இன்னொரு அரசியல் கட்சியைச் சார்ந்த, சாரத பெண்களைப் பற்றிப் பேசும்போது அரசியல் கட்சிகள், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு இதில். எந்தப் பொறுப்புமே இல்லை என்பதுபோல் இருப்பதும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து நடக்கப் போகிறது?
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வேறு யாரையும் விட இந்த சமூகத்தில் அதிகப் பொறுப்பு இருக்கிறது. உங்கள் மௌனம் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை இயல்பாக்கிக்கொண்டு வருகிறது. இன்றைய genz தலைமுறை இதை எளிதில் கடந்து போகாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டிய நேரம் இது.
அவர்கள் நம்மிடம் நாகரிகமான, கண்ணியம் மிக்க அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ஆபாசமான, ஆபாசத்தை மௌனமாகக் கடந்துபோகும் அரசியலை அல்ல. அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் அந்தந்த கட்சியினரின் ஆபாசப் பேச்சுக்களுக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதில் கூட அக்கட்சியைச் சார்ந்த பெண்களைத்தான் நீங்கள் இதுகுறித்து ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்பார்கள். ஏன் ஆண் தலைவர்கள் கேட்க வேண்டியதுதானே ? எல்லாப் பொறுப்புகளையும் தலைமைப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் பெண்களே தான் ஏற்றாக வேண்டுமா? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும் ஆண்கள் எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டார்களா?
இதுகுறித்து ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுதுதான் பெண்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் இந்த ஆபாச அரசியலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும். நிச்சயம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறைகள், ஆபாசத்தாக்குதல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும்.” என்று ஜோதிமணி தன்னுடைய சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.