கடந்த பதினேழு நாள்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பகுதிநேர ஆசிரியர்கள் முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து போராட்டத்தைத் தள்ளிவைத்துள்ளனர்.
தி.மு.க. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, தங்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 8ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்வதும் பின்னர் மறுபடியும் அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதுமாக நாள்கள் போய்க்கொண்டிருந்தன.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில், ஆளுநர் உரை விவாத முடிவில் முதலமைச்சர் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தைப் பொறுத்து அவர்களை முழு நேர ஆசிரியராக எடுக்கும்போது மதிப்பெண் அளிக்கப்படும்; அதற்கான தனி ஆணை பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அவரின் அறிவிப்பை ஏற்று பகுதிநேர ஆசிரியர்கள் அமைப்புகளின் கூட்டியக்கம் தங்கள் போராட்டத்தைத் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.