”தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இன்றியமையாதவையான பத்திரப் பதிவு, நில அளவை ஆகிய பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நில அளவையாளர்கள் உட்பட்ட பணியாளர்களின் வேலைக்கு அச்சுறுத்தலையும், பத்திரப்பதிவில் கூடுதல் செலவு மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
”சென்னையில் அம்பத்தூர், திருவான்மியூர், தியாகராயர்நகர் மற்றும் செங்கல்பட்டு, கோவை என 5 இடங்களில் முன்மாதிரி பத்திரப் பதிவு மையங்களை தனியார் மூலம் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. இந்த மையங்கள் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் மால்களில் அமைக்கப்படும்; அவற்றில் அனைத்து வகையான சொகுசு வசதிகளும் இடம் பெற்றிருக்கும்; பத்திரப் பதிவு செய்ய விரும்புவோர் வரிசையில் நிற்காமல் உடனடியாக பத்திரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் 20 இடங்களில் இம்மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் பத்திரப் பதிவு செய்ய வழக்கமான கட்டணங்களுடன் ரூ.2090 முதல் ரூ.10,630 வரை சேவைக் கட்டணமாக இந்த மையங்களை நடத்தும் தனியார் நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது 56 பதிவு மாவட்டங்களில் மொத்தம் 595 பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில் தனியார் பதிவு மையங்கள் உருவாக்கப்படுவது தேவையற்றது. அரசு பதிவு அலுவலகங்களில் வழங்கப்படுவதை விட மேம்பட்ட வசதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மையங்கள் அமைக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பத்திரப் பதிவுக்காக வருவோருக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதை பத்திரப் பதிவுத் துறையின் கீழ் இயங்கும் பத்திரப் பதிவு அலுவலங்களில் செய்து கொடுக்க முடியும். இதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் பதிவுத் துறை மிகவும் முக்கியமானது. பத்திரப் பதிவு மூலமாக மட்டுமே நடப்பாண்டில் இந்தத் துறைக்கு ரூ.35,109 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1% நிதியை செலவிட்டாலே அனைத்து பதிவு அலுவலகங்களிலும் குளிரூட்டி உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை செய்து தர முடியும். அந்தப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி, அதற்காக ரூ.10,630 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது பொதுமக்களை சுரண்டும் செயலாகும்.
தனியார் நிறுவனங்களால் அமைக்கப்படும் முன்மாதிரி பதிவு மையங்களில் பத்திரப் படிவுக்காக வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளையும், சேவைகளையும் மட்டும் தான் தனியார் நிறுவனங்கள் செய்யும் என்றும், பத்திரப் பதிவு மற்றும் அது சார்ந்த சட்டப்பூர்வ பணிகளை அரசு பதிவாளர்கள் தான் செய்வார்கள் என்பதால் இதை தனியார்மயமாக்கலாக கருத முடியாது என்றும் அதிகாரிகள் சார்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
இந்தியாவில் தனியார்மயமாக்கலின் வரலாற்றை அறிந்தவர்களால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார்மயமாக்கல் என்பது ஒட்டகத்தைப் போன்றது. அந்த ஒட்டகம் கூடாரத்திற்குள் மொத்தமாக நுழைந்து விடாது. முதலில் தலையை மட்டும் தான் நுழைக்கும். அதன்பின் படிப்படியாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்தக் கூடாரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். பதிவுத்துறையில் 5 முன்மாதிரி பதிவு மையங்களை அமைப்பதற்கு தனியாரை அனுமதிப்பதும் ஒட்டகத்தின் தலையை கூடாரத்திற்குள் நுழைக்க அனுமதிப்பதற்கு ஒப்பானது. வெகுவிரைவில் ஒட்டுமொத்த பதிவுத்துறையும் தனியார்மயமாக்கப்படுவதற்கே இது வழிவகுக்கும்.
அதேபோல், நில அளவைத் துறையில் மாதம் ரூ.23 ஆயிரம் என்ற ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் நில அளவையாளர்கள் (சர்வேயர்கள்) தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இது தொடர்பாக துறையின் உயரதிகாரிகளை அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த போது, ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நில அளவைப் பணிகளும் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்படவுள்ளதாகவும், தற்காலிக நில அளவையாளர்கள் அனைவரும் திசம்பர் மாதத்துடன் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் குறைந்த ஊதியத்திலான பணியும் கைவிட்டுப் போய்விடுமோ? என அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நில அளவைப் பணிகளாக இருந்தாலும், பத்திரப் பதிவாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த இரு பணிகளும் தனியார்மயமாக்கப்பட்டால் ஊழல் மேலும் மேலும் அதிகரிப்பது மட்டுமின்றி, சரி செய்ய முடியாத அளவுக்கு முறைகேடுகளும் அதிகரிக்கும். எனவே, பத்திரப் பதிவு, நில அளவை ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக இரு துறைகளிலும் போதிய எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமித்து, அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.