தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நியாயமான இழப்பீட்டை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
”வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் அரசு மேற்கொண்டிருக்கும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேரடியாகவும், காணொளி மூலமாகவும் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மறுபுறத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரடியாக மழைநீர் சூழும் பகுதிகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. மேலும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என்று பாராட்டு மழை பொழிந்துள்ள வேல்முருகன்,
”இருப்பினும், டெல்டா மாவட்டங்களிலும், இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் விளைநிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், மிளகாய் பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
”மழை நின்று மூன்று நாட்களாகியும் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், மழைநீர் வடியாமல் வயல்வெளிகளில் தேங்கி நிற்பதனாலும் நெற் பயிர்கள் அழுகி அழிந்து வருகின்றன. எனவே, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நியாயமான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.