தமிழ் நாடு

பல்டியடித்த கல்லூரிக் கல்வி இயக்குநர்... எதிர்ப்பு வலுத்ததால் அறிக்கை ரத்து!

Staff Writer

பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கல்லூரிக் கல்வி இயக்குநர் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். 

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சச்சிதானந்தம் தொடங்கி தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிவரை பல அரசியல் பிரமுகர்களும் கல்லூரிக் கல்வி இயக்குநரின் சர்ச்சைக்குரிய அந்த சுற்றறிக்கையைக் கண்டித்து கருத்து வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து, இன்று சென்னை, கோவை உட்பட பல இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினரும் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தினரும் கண்டனப் போராட்டமும் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் தன்னுடைய முந்தைய சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கான புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.