பா.ஜ.க. எம்.பி.கள் குழுவுக்கு முதலமைச்சர் பதில்கூற வேண்டியதில்லை என சிபிஎம் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து:
” பிஜேபி கட்சியைச் சார்ந்த எம். பி. அனுராக் தாக்கூர் கரூர் மரணம் தொடர்பாக, நடந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆளுங்கட்சி எம்பிக்கள் குழு என்றால் அதற்கு என்ன வானளாவிய அதிகாரம் இருக்கிறதா? அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்டுள்ள பல ஆணையங்கள் கேள்வி எழுப்பினால் மாநில அரசு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. ஆனால், அனுராக் தாக்கூர் வரலாறு ஒன்றும் புனிதமானது அல்ல.
ஏற்கனவே, மைக்கேல் பட்டி மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு பொய்யை கூறி விஜயசாந்தி எம்.பி. தலைமையில் பிஜேபி குழுவை அனுப்பியது. பிறகு சிபிஐ விசாரித்து அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறியது. பொய் சொன்னதற்காக அண்ணாமலை வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
தற்போது கரூர் மரணத்தை வைத்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற பிஜேபி துடிக்கிறது.
கெடுநோக்கம் கொண்ட இவர்களுக்கெல்லாம் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டியதில்லை. உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
ஒரு நபர் நீதிபதி ஆணையம் விசாரிக்கிறது. இதற்கிடையில், சூப்பர் விசாரணை குழுவா பிஜேபி எம்பிக்கள் குழு?” என்று சண்முகம் கூறியுள்ளார்.