மடிக்கணினி 
தமிழ் நாடு

பிஎச்டி ஆய்வாளர்களுக்கும் மடிக்கணினி- வேல்முருகன் கோரிக்கை

Staff Writer

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. 

”தமிழ்நாடு அரசு மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தி வரும் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வியை உரிமையாக்கும் சமூக நீதி அரசியலின் வெளிப்பாடு ஆகும். டிஜிட்டல் அறிவை வளர்த்தல், நவீன தொழில்நுட்பத் திறன்களை மாணவர்களிடம் விதைத்தல், கல்வி,வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் என்ற உயரிய நோக்கங்களோடு 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் இந்தத் திட்டம் பாராட்டுக்குரியது.” என்று அரசுக்கு அவர் அறிக்கை ஒன்றில் பாராட்டும் தெரிவித்துள்ளார். 

”முதல் கட்டமாக 10 லட்சம் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த முற்போக்கானத் திட்டம் ஆராய்ச்சி கல்வியின் உச்ச நிலையில் உள்ள முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் கட்டாயம் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது உறுதியான கோரிக்கையாகும்.” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், ”இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெறுவது, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் கிடைத்தப் பெருமைமிக்க சான்றாகும். இந்த உயர்ந்த நிலை, சமூக நீதி, இடஒதுக்கீடு, கல்வி வாய்ப்புகளின் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழக அரசின் தொலைநோக்குக் கொள்கைகளால் மட்டுமே சாத்தியமானது.

அதே நேரத்தில், அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்டம் பயிலும் பல முழுநேர மற்றும் பகுதிநேர ஆய்வாளர்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகப் பின்னணியிலிருந்து வருபவர்கள். அவர்கள் தான் தமிழகத்தின் சமூக நீதி மாதிரியின் உயிர்ப்பான சாட்சிகள்.

இன்றைய ஆராய்ச்சி உலகில், கணினி இல்லாத ஆய்வு என்பது சிந்திக்க முடியாத ஒன்று. தரவு சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை, இலக்கிய ஆய்வுகள் , புள்ளியியல் மென்பொருள், சர்வதேச தரவுத்தளங்கள், ஆய்வுக் கட்டுரைகள், உலகளாவிய கல்வித் தொடர்புகள் வரை அனைத்தும் மடிக்கணினியை சார்ந்தே இயங்குகின்றன.

ஆனால், பல ஆய்வாளர்கள் இன்னும் பழைய கணினிகளோடு, அல்லது கணினியே இல்லாமல், கடன், சிரமம், மன அழுத்தம் ஆகியவற்றோடு ஆராய்ச்சி மேற்கொள்வது, அறிவுச் சமத்துவத்திற்கு எதிரான நிலை ஆகும். 

எனவே, ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தில், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் உடனடியாக இணைத்து, அவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க, தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.