தி.மு.க. கூட்டணியில் புதிதாகச் சேர்ந்த கட்சிகளுக்கு தலா ஒருதொகுதியை வழங்க அக்கட்சி உறுதியளித்துள்ளது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கேட்டதாக த.வா.க. தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் அடுத்த சுற்றில் மீண்டும் பேசுவோம் எனச் சொன்னார்கள். விருப்பப் பட்டியலைக் கொடுத்திருப்பதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அக்கட்சிகளைத் தொடர்ந்து, முன்னர் அ.தி.மு.க. அணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ., ம.ஜ.க., முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கவும் அவை மூன்றுமே தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டன. ஆனால், ம.ஜ.க. மட்டும் சின்னம் குறித்து பின்னர் பேசிவிட்டு முடிவுசெய்வதாகக் கூறிவிட்டது.