பெ. சண்முகம் 
தமிழ் நாடு

போலீஸ் அத்துமீறல்- சிபிஎம் செயற்குழுவில் கண்டனத் தீர்மானம்!

Staff Writer

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2026 ஜனவரி 9 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சென்னையில் போலீஸ் அடக்குமுறையைக் கண்டித்து ஒரு தீர்மானமும் அடங்கும். 

அதன் விவரம்:

“இறையாண்மை மிக்க வெனிசுலா நாட்டின் தலைவர் மதுரோ மற்றும் அவரது இணையரை அமெரிக்க ராணுவம் அவரது நாட்டிற்குள் புகுந்து கைது செய்து கடத்திச் சென்று அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவிலும், உலகெங்கிலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர்.

                சென்னையில், அமெரிக்க தூதரகம் அருகில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனவரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம்.

                அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5ந் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தோழர்கள் ஒன்று சேர ஆரம்பித்தவுடன், காவல்துறையின் துணை ஆணையர் தலைமையில் சாலையின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த தோழர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். கட்சியின் மாவட்ட செயலாளர் சட்டையைப் பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் தலை இடிபடும் வகையில் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பல தோழர்களை கைகளால் குத்தியும், கால்களால் மிதித்தும் அடித்து ஏற்றியுள்ளனர்.

                ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பே நான்கு வாகனங்களில் ஏற்றப்பட்ட தோழர்கள் அண்ணா சாலையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை காவல்துறை வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்டனர். மூன்று மணி நேரம் வாகனத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு மதியம் ஒரு மணிக்கு அழைத்து சென்றனர்.

                இதேபோன்று, ஜனவரி 6 அன்று அமெரிக்க அரசை கண்டித்து காமராஜர் அரங்கத்தின் பின்புறம் உள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையும் காவல்துறை பலவந்தமாக கைது செய்துள்ளது. இதேபோன்று தரமணியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட தோழர்களையும் காவல்துறை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், தலைவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் மீது பொய் வழக்கும் புனையப்பட்டுள்ளது.

                காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டுகிறது.

                அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து சென்னையில் அதன் தூதரகம் அருகில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், சமீப காலமாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை மாநகர காவல்துறை  முடிவெடுத்து அராஜகமாக நடந்து வருகிறது. ஜனநாயக உரிமைகளை எப்படி செயலாக்க வேண்டும் என்பதை சென்னை மாநகர காவல்துறை மட்டுமே தீர்மானிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

                எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும், வரும் காலங்களில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உரிமைகளை ஒடுக்கும் முறைக்கு முடிவு கட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

                மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சமீப காலத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது தண்டனை வரி விதிப்பது உள்ளிட்டு ராணுவத் தலையீடுகளையும் நடத்திவரும் நிலையில், அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பொருத்தமான ஒரு இடத்தை ஒதுக்கிட வேண்டும்.” என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.