விலைவாசி உயர்வு 
தமிழ் நாடு

மக்கள் வாழ்வதா, நாண்டுகிட்டு சாவதா?

Staff Writer

”தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. அரிசி, காய்கறிகள், பழங்கள், பருப்பு, எண்ணெய், சர்க்கரை உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.” என்று த.வா.க. தலைவர் ஆதங்கப்பட்டுள்ளார். 

”மே மாதத்தில் ரூ.50-க்கு வாங்கிய அரிசி இன்று ரூ.94-க்கு விற்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். ஒரே பொருளின் விலை இவ்வளவு வேகமாக உயர்ந்தால், குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தும் மக்களின் நிலை என்னவாகும்?

இதனுடன் மின்கட்டணச் சுமையும் மக்களை அழுத்துகிறது. மின்கட்டணம் உயர்வதற்கான காரணம் என்ன? அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது? இக்கேள்விகளுக்கு அரசு வெளிப்படையான பதிலை வழங்க வேண்டும்.” என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். 

”மக்களும் ஊடகங்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கேள்விகளுக்கு நேரடியான பதில் அளிப்பதற்குப் பதிலாக அமைச்சர்கள் ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கூறி தப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோல், ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான மீட்டர் கட்டணக் கோரிக்கையிலும் அரசு தொடர்ந்து காலம் கடத்துகிறது. எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, உதிரிபாகங்களின் விலை என அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு, இதோ செய்கிறோம்… அதோ செய்கிறோம்… என்று நாடகம் ஆடுகிறது.

வெறும் வாக்குறுதிகளால் மக்கள் குடும்பம் நடத்த முடியாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதிலும், மின்சாரச் செலவைக் குறைப்பதிலும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு இனியும் காரணங்களைக் கூறாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்த எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?, மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைக்கப் போவது எப்படி?, ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டணக் கோரிக்கையை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது? என்பதற்கு தெளிவான காலக்கெடுவுடன் பதில் அளிக்க வேண்டும்.

மக்கள் வாழ்வதற்காக வாக்களித்தார்கள். விலைவாசி உயர்வைச் சுமந்து சாவதற்காக அல்ல என்பதை, முதலமைச்சரும், அமைச்சர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.” எனவும் வேல்முருகன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.