தமிழ் நாடு

மதுரையில் பிப்.21இல் கமல் கட்சி காந்தி பெயரில் கூட்டம்!

Staff Writer

கமல் தலைமையிலான மக்கள்நீதிமையம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில் கமலைப் பாராட்டியும் ஆட்சியைப் பற்றியும் பாராட்டியன உட்பட மொத்தம் பன்னிரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய சில தீர்மானங்கள் விவரம்:

“கட்சி தொடங்கப்பட்ட தினம் மற்றும் உலக தாய்மொழிகள் தினம் ஆகிய சிறப்புகளைக் கொண்ட பிப்ரவரி 21-ஆம் தேதி, நமது தலைவர் அவர்கள் மதுரை நகரில் ‘Remembering Babuji’ எனும் பெயரில் பிரமாண்டமான கூடுகைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து வருகை தரும் ஆகச்சிறந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்களுடன் நமது தலைவர் கலந்துரையாடல் நிகழ்த்தவிருக்கிறார்.

வருகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் விருப்பமனு செய்யலாம். விருப்ப மனு கட்டணமாக ரூ.50,000/- நிர்ணயிக்கப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு அறிவிக்கிறது.

தெளிவான சிந்தனையும், வலுவான உடலும் கொண்ட இளையோர்தான் ஓர் ஆரோக்யமான சமுதாயத்தின் அடையாளங்கள். நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு - அரசு இயந்திரம் - பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வல அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கமிட்டி அமைக்கப்பட்ட வேண்டும். இந்தக் கமிட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் நேரடி மேற்பார்வையில் செயல்பட வேண்டும்.

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை, போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு பொதுமக்கள் புகாரளிக்கவும், அந்தப் புகார் மீது அடுத்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும், போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், புழக்கத்தில் விடுபவர்கள் மற்றும் பயன்படுத்துகிறவர்கள் மீது சட்டரீதியான கடுமையான தண்டனைகளை விதிக்கவும், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் செய்கிற ஓர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கமிட்டியாக இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது.”