மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருத்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
”அரசு மருத்துமனைகளைப் போன்று தனியார் மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு தடையற்ற சிகிச்சை வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதற்குத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் சிகிச்சை வழங்க மறுக்கக் கூடாது என்பன உட்பட்ட அறிவுறுத்தல்களை அரசு வழங்கிட வேண்டும்.
டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. கட்டணக் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையும் அரசு விடுக்க வேண்டும். மீறும் மருத்துவமனைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்று மு.வீரபாண்டியன் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.