திருப்பரங்குன்ற விவகாரத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்து விவாதிக்க வலியுறுத்தினர். அதை அவைத்தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் ஏற்கவில்லை.
தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
பின்னர், கோரிக்கை ஏற்கப்படாததால் அதைக் கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க.வின் கோரிக்கையை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினரும் வெளிநடப்பு செய்ததாக திருச்சி சிவா எம்.பி. ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்னை, உயர்நீதிமன்றம் அருகில் இன்று காலையில் அதன் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சுவாமிநாதன் தொடர்ச்சியாக மதச்சார்பின்மைக்கு விரோதமாக தீர்ப்புகளை வழங்கிவருவதாகவும் ஒரு பக்கச் சார்பாக தீர்ப்பு வழங்கிவருவதாகவும் நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் வரன்முறை உண்டு எனவும் இன்று இரவுக்குள் தலைமை நீதிபதியிடம் தங்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்படும் என்றும் கூறினார்.