”காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத் அவர்களை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது :
”மேகதாது அணை கட்டப்படவுள்ள இடத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் குழு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; ஆய்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது கர்நாடக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் கோரும் கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களை உடனுக்குடன் வழங்கவும் கர்நாடக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் மேகதாது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த 2019&ஆம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29&ஆம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19&ஆம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது. அடுத்த 10 நாள்களில், அதாவது ஆகஸ்ட் 29&ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்கள், மேகதாது அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தை கர்நாடகம் அணுகும் என்று கூறியிருந்தார். அடுத்த நான்காம் நாளில் கர்நாடக அமைச்சர் மத்திய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்து புதிய அணைக்கு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் காட்டும் தீவிரத்தை இது உணர்த்துகிறது.
அதே நேரத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அதை சுட்டிக்காட்டி, கர்நாட அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக அரசு அதன் அலட்சிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.
தமிழக அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் காவிரி விவகாரத்தில் கடைபிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிடுங்கள் என்பது தான். மத்திய நீர்வள ஆணையர், மத்திய நீர்வள அமைச்சர், பிரதமர் ஆகியோரை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய 2018&ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தும் போது இதை சுட்டிக் காட்டி வாதிட முடியும் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.