மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையும், தவறான பொருளாதாரக் கொள்கையும் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றும் மேற்காசியப் போரை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாமல் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.
‘பொன்னி அரிசி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டை ஆளும், த.வெ.க., அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அரிசி, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்ல, அனைத்துப் பொருட்களின் விலையும், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களில், மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
”விலைவாசி உயர்வுக்கு தமிழ்நாடு அரசைக் குற்றம்சாட்டும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய பாஜக அரசை ஒரு வார்த்தை கூட குறை சொல்லாமல், அதைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு முழுக்க முழுக்க நிர்வாகத் திறனற்ற மோடி அரசே காரணம். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘வரும் காலங்களில் விலைவாசி கடுமையாக உயரும். உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும்" என்று கடந்த சில மாதங்களாக பேசி வருகிறார். ஆனாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலைவாசி உயர்வுக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி ஆகும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இந்திய வணிகத்தை பாதுகாக்காததும் தான் இதற்கு மிக முக்கிய காரணம்.
'சூப்பர் எல்நினோ” காரணமாக, பருவ மழை பொய்த்து, உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்று கடந்த ஆண்டே வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் வந்தன. சுற்றுச்சூழல் நிபுணர்களும் இது குறித்து மோடி அரசை எச்சரித்து இருந்தனர். ஆனாலும், அதை எதிர்கொள்ள மோடி அரசு எந்த முன் தயாரிப்பையும் செய்யவில்லை.
மோடி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்து, சரியாக திட்டமிட்டு இருந்தால், விலைவாசி வியர்வை கட்டுப்படுத்தி இருக்கலாம். இப்போதும் கூட தமிழ்நாடு அரசு கிலோ 30 ரூபாய்க்கு பொன்னி அரிசி, ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காயம் வழங்குவது என்று மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், மோடி அரசு வழக்கம்போல, மேற்காசியப் போர் உக்ரைன் போரைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது.
எனவே, மோடி அரசு இனியும் தாமதிக்காமல், மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விலைவாசி வியர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும். மக்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலைகளை மோடி அரசு உயர்த்தியதும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். எனவே, பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலிய மாநிலங்கள், மின்சாரப் பற்றாக்குறையால் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், மாநில அரசுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே, மின்சார தட்டுப்பாடு உள்ள தமிழ்நாட்டிற்கு, மத்திய தொகுப்பிலிருந்து தேவையான மின்சாரத்தை மோடி அரசு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களிடம் மன்னிப்பு கேட்டு, மோடி அரசு பதவி விலக வேண்டும்.” என்றும் மாணிக்கம் தாகூரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.