தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
நான் பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது; இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
” இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அப்படியான சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன்.
ஆனால், இப்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன்; நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால் மிக, மிக, மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது.
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றார்கள்.
அடுத்து, இன்னும் பெருமையுடன், கான்ஃபிடன்டா சொல்கிறேன். நாங்கள் அமைக்கப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.
நான் பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.
ஆனால், தமிழ்நாட்டினுடைய நலனுக்காகச் செயல்பட வேண்டிய ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு எதிராக, மக்களுக்காகப் பாடுபடும் நமக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதுதான் வேதனையா இருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் அவர்கள், தான் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் சென்றது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், அவர் வகிக்கின்ற பதவியை, அவரே அவமானப்படுத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே, ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு கேவலப்படுத்துற செயலாக இருக்கிறது. அதிலேயும், கடந்த மூன்று ஆண்டுகளாக நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது, மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்தப் பேரவை கருத வேண்டியுள்ளது.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுவதும் - முடிவுறும்போது ‘நாட்டுப்பண்’ பாடுவதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு. முதலிலேயே ‘நாட்டுப்பண்’ பாடவில்லை என்பதையே திரும்பத் திரும்ப குற்றச்சாட்டாக அவர் சொல்லிக்கொண்டு வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையைக் கொண்டுள்ளவர்கள் நாங்கள்.
தேசிய ஒருமைப்பாட்டிலேயும், நாட்டுப்பற்றிலேயும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நாங்கள் என்பதை, இந்தப் பேரவை உறுப்பினர்கள் சார்பாக ஆளுநருக்கு அழுத்தந் திருத்தமாக நான் சொல்லிக்கொள்ள விரும்புறேன். யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்துப் பாடம் எடுக்கின்ற நிலைமையில நாங்களும் இல்லை; தேசபக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு இந்த தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை. ஜனநாயக தேசத்தின் அரசமைப்பு மாண்பை, எதேச்சாதிகாரத் தன்மையுடன் மாற்ற நினைப்பவர்கள் தான், இன்றைய காலக்கட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யாரென்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேச வேண்டிய நான் இன்றைக்கு ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேசும் நிலையில் இருக்கிறேன். இது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இன்னும் சொல்லப் போனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடி இது. அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள்கூட இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. அந்த வகையில், அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், சோதனைகள் எனக்குப் புதிதல்ல; சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள், மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை எதுவும் செய்யாது.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.