தமிழ் நாடு

ரூ.8000 கூப்பன்: பொய்ப் பிரச்சாரத்துக்கு தடைவிதிக்க வேண்டும்!

Staff Writer

திருச்சி மண்ணச்சநல்லூரில் திமுகவினர் வினியோகித்த ரூ.8000 போலிக் கூப்பனை தமக்கு ஏன் வழங்கவில்லை? என்று கூறி வாக்குவாதம் செய்த சிந்துஜா என்ற பட்டியலின இளம்பெண்ணை திமுகவினர் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, தாக்கியதால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையப்போவது உறுதி என்பதை அறிந்து கொண்ட திமுக, மோசடி செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக எல்லா ஊர்களிலும் போலிக் கூப்பன்களை வழங்கி கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி வருகிறது. அது பொய் என்பதை உணராமல் போலி கூப்பனைக் கேட்டதற்காகத் தான் திருச்சியில் பட்டியலின பெண்ணை தீட்டியும், தாக்கியும் தற்கொலை செய்து கொள்ள வைத்திருக்கிறது திமுக.

திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியின் பயன் என்னவென்றால், ரூ.8000 கூப்பனுக்காக அலையும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தைச் சீரழித்திருப்பதுதான்.” என அறிக்கை ஒன்றில் சாடியுள்ளார், அன்புமணி.

”திமுக ஆட்சிக்கு வந்தால் கூப்பன் வழங்கப்படும் என்பது முதல் மோசடி என்றால், துண்டுச்சீட்டை அச்சிட்டுக் கொடுத்து, அதைக் கடைகளில் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி மக்களை ஏமாற்றுவது இன்னொரு மோசடி ஆகும். இந்த மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திமுகவின் இந்த மோசடிக்கு துணை நிற்பதும் கண்டிக்கத்தக்கவை.” என்றும் அன்புமணி கூறியுள்ளார்.