துரை வைகோ 
தமிழ் நாடு

வாய்திறந்தார் திருச்சி எம்.பி. துரை வைகோ!

Staff Writer

திருச்சி இரயில்வே மண்டல அலுவலகத்தின் பெயரில் இந்தியைப் புகுத்தியுள்ளதாக முதலமைச்சர் முதல் பல்வேறு தொகுதி மக்களவை உறுப்பினர்கள்வரை தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர். 

திருச்சியில் ஆளும் தி.மு.க.சார்பில் கண்டனப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இதைப் பற்றி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். 

அவரின் இதுகுறித்த சமூக ஊடகப் பதிவு:

“ திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டு ,தெற்கு ரெயில்வே நிர்வாகம் அதற்கு " கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் சூட்டியுள்ளது.

" கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் " கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள்.

தமிழில் பொருள் விளங்க பெயர் சூட்டாமல் அப்படியே இந்தி பெயரை நுழைவாயிலில் பொறித்து இருப்பது ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்தி திணிப்பையே காட்டுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

ஒன்றிய அரசு மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் பெயர்கள், அவற்றின் கொள்கை விளக்கங்கள் ஆகியவை , 2014-ம் ஆண்டில் பாஜக ஒன்றிய அரசில் பொறுப்பேற்ற பிறகு இந்தியில் மட்டுமே பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான விளம்பரங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் ஆகியவை இந்திப் பெயர்களையே தாங்கி வருகின்றன.

எடுத்துக்காட்டாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, (பிரதமரின் மக்கள் நிதி திட்டம்), பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீட்டுத் திட்டம்) பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பயிர் காப்பீட்டுத்திட்டம்), பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா (மலிவு விலை மருந்து கடைகள் திட்டம்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற பல திட்டங்களும் தமிழ்நாட்டில் இந்தி பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

சென்னை-நெல்லை இடையிலான ரயில் சேவைக்கு 'அந்த்யோதயா' என்றும், மதுரை-சென்னை இடையிலான அதிவேக ரயில் சேவைக்கு 'தேஜஸ்' என்றும் இந்தியில் தான் பெயர் சூட்டியுள்ளனர்.

ஏற்கெனவே ஒன்றிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகிய அனைத்து மாநில மக்களும் அணுக வேண்டிய அமைப்புகளில் இந்தி மொழியை வலுக்கட்டாயமாக பாஜக அரசு திணித்து வருகிறது.

ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்றவை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் பாரதிய நியாய சன்ஹிதா' பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், என, ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரைவிகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ எனப் பெயர் மாற்றம் செய்து பாஜக அரசு இந்தி மொழி திணிப்பைத் தொடர்ந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தெற்கு ரயில்வே இந்தி திணிப்பை செயல்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயரைப் பொறிக்க தெற்கு ரயில்வே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று துரை வைகோ கூறியுள்ளார்.