தமிழ் நாடு

விழுப்புரத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்!

Staff Writer

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் கனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து போயுள்ளன. மேலும், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மக்காச்சோளம் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இரண்டு நாட்கள் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது; மாவட்டம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர்; மாவட்டம் முழுவதும் சாலைகள் சேதமடைந்துள்ளது; நெற்பயிர்கள், பணப்பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது; எனவே, விழுப்புரம் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ”மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை உடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு தாமதமின்றி பார்வையிட்டு மாநில அரசு கோரும் நிவாரண நிதியை உடன் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழிந்துபோன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணமும், தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் இழப்பீடும், முற்றிலும் இடிந்து போயுள்ள வீடுகளுக்கு தரமான புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுகிறோம்.

மேலும் மாநில அரசின் வருவாய்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து விடுபடாமல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.” என்றும் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.