சிறுதானியங்கள் மதிப்புக்கூட்டல் 
தமிழ் நாடு

விவசாயத் தொழில்முனைவு- 100 பேருக்கு தலா ரூ.1.5 கோடிவரை கடன்!

Staff Writer

வேளாண் துறையில் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு அதிகபட்சம் தலா 1.5 கோடி ரூபாய்வரை கடன் வழங்கும் திட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் - தோட்டக்கலை பயிர்களில்  நவீன மற்றும் புதுமையான மதிப்பு கூட்டும் திட்டங்கள்,  ஏற்றுமதித் திறன் கொண்ட  விளைபொருட்கள், விரைவில் வீணாகக்கூடிய காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களில்  மதிப்பு கூட்டுதல், மாவட்டத்திற்கே உரிய தனித்துவமான வேளாண் விளைபொருட்களின் மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றில் ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை மாவட்டங்கள் தோறும் தேர்வுசெய்ய ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள், முதலில், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து (Detailed Project Report), வங்கியில் கடன் ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகு, அவர்கள் மானியம் பெறுவதற்கான செய்த விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக் குழு, மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத்தொகை அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை ஒரே தவணையாக வழங்கப்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுவதுடன் கூடுதலாக  வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் (Agricutlure Infrastructure Fund)  3  சதவீத வட்டி மானியமும் பெறலாம்.   

ஏற்கெனவே ஒன்றிய, மாநில அரசு திட்டங்களின் கீழ் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில்களுக்கு நிதி உதவி பெற்ற  பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இவர்களுக்கு அதிகபட்ச மானியத் தொகையிலிருந்து  ஏற்கனவே வேறு ஏதாவது திட்டத்தில் பெற்றுவரும் மானியத்தொகை போக மீதத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இதுவரை சுமார் 305 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில்  மூலிகைப் பயிர்களில் மதிப்புக்கூட்டுதல்,  மாம்பழக் கூழ் மற்றும்  உறை நிலை மதிப்புக்கூட்டுதல் (Individual Quick Freezing), பலா விதைப் பவுடர்,  முந்திரி மதிப்பு கூட்டு பொருட்கள், நெல்லிச் சாறு, நெல்லிப் பவுடர், கற்றாழையிலிருந்து அழகு சாதனப் பொருட்கள், தேங்காய் விர்ஜின் ஆயில், முருங்கை இலை கேப்சூல், பிஸ்கட், சிறுதானியங்களில் பாஸ்தா, நூடுல்ஸ், அவல், பிஸ்கட், காளான் ஊறுகாய், பப்பாளி கூழ்,   ஜாம், சின்ன வெங்காயம் பதப்படுத்தல் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கிட 50 பெண் தொழில்முனைவோர்கள் உட்பட்ட 130 பயனாளிகள்  பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் முதலிய பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி, தரமான உற்பத்திப் பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைசெய்து பொருளாதார ஏற்றம் பெற ஆர்வமுள்ள அனைத்து தொழில்முனைவோர்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.