தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தில் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இயந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்றி வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்று த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அனகாபுத்தூர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் மூன்றாம் தெரு, காயிதேமில்லத் நகர் போன்ற பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து, 3000க்கும் மேற்பட்ட மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டார்கள். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கிறோம் என்று கூறி, புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை, காவல்துறை மற்றும் இயந்திரத்தின் துணைக்கொண்டு தமிழ்நாடு அரசு அகற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.
”அம்மாபட்டினத்தில் வாழும் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் காவல்துறையை குவித்து, பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், சம்பந்த தனியார் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளை மட்டும் குறி வைப்பது ஏன்?
காவல்துறையும், அதிகாரிகளும் வீடுகளை இடிக்கும் போது மக்களின் உடைமைகளை கூட எடுத்துக் கொள்ள அனுமதிக்காமல் மிகவும் அடாவடித்தனமாக செயல்பட்டுள்ளனர். வீட்டு வரி செலுத்தி இருப்பதற்கான ஆவணங்களையும், மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு பட்டா அளிப்பதாக கொடுத்த சான்றிதழையும் மக்கள் அதிகாரிகளிடம் காண்பித்த போதும் அதைப் பார்ப்பதற்கு கூட அதிகாரிகள் தயாராக இல்லை. எப்படியாவது வீடுகளை இடித்து விட வேண்டும் என்பதில் தான் ஒரே குறிக்கோளாய் இருந்துள்ளனர்.
தங்களுடைய உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தங்கள் கண் முன்னே இடிக்கப்படுவதைப் பார்த்து துக்கம் தாங்க முடியாமல் மக்கள் கதறி அழுதுள்ளனர். சிலர் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லை, அதற்குள் வீடுகளை இடிக்கிறார்களே என்று புலம்பி வருகின்றனர்.
எனவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தில் வீடுகளை இடித்து அகற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
அம்மக்கள் ஆக்கிரமிப்பில் தான் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கான மாற்று இடமும், வீட்டையும் ஒப்படைத்த பிறகே, இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.” என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அம்மாபட்டினத்தில் வீடுகளை இழந்து கலங்கி நிற்கும் மக்களுக்கு உடனடியாக மாற்று இடமும், வீடும் வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, அம்மா பட்டினத்தில் உள்ள பள்ளிவாசலை இடித்து அகற்றவும் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அத்தகைய முடிவை அதிகாரிகள் உடனடியாக கைவிட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில், ஏழை, எளிய மக்களின் வீடுகள் இடிக்கும் நடவடிக்கையை முற்றிலும் முழுவதுமாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.