மகளிர் இலவசப் பயணம் 
தமிழ் நாடு

வெற்றிப் பயணம்- பேட்டா, இன்சென்டிவை ஈடுகட்ட வேண்டாமா?

Staff Writer

மகளிர் வெற்றிப்பயணத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பேட்டா, இன்சென்டிவ் குறைவை முழுமையாக ஈடுகட்ட அரசுக்கு இந்திய தொழிற்சங்க மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் மகளிர் கட்டணமில்லா பயணம் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றிப் பயணத்திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் அறிவிப்பதன் காரணமாக ஏற்கெனவே பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணம் குறையும். அதன் காரணமாக வசூல் குறைவு ஏற்படும். போக்குவரத்துக் கழகங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்துகளின் வசூலுக்கு ஏற்ற அடிப்படையில் பேட்டா வழங்கப்படும் நடைமுறை உள்ளது.

”கட்டணமில்லாப் பயணம் அறிவிக்கும் நிலையில், தொழிலாளர்கள் ஏற்கெனவே பெற்றுவரும் பேட்டாவில் எவ்விதக் குறைவும் ஏற்படாமல் தொடர்ந்து பேட்டா கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென போக்குவரத்துச் செயலாளருக்கு கடந்த 28.9.2026ஆம் தேதியன்று கோரிக்கை வைத்தோம்.

கடந்த 5.10.2026ஆம் தேதி போக்குவரத்து செயலாளரைச் சந்தித்தபோது பேட்டா இரட்டிப்பாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு வழங்கக்கூடாது, மகளிர் வெற்றிப் பயணத்திற்காக பயணச்சீட்டு வழங்கும்போதே அதற்குரிய தொகை தானியங்கி பயணச்சீட்டு கருவியில் காண்பிக்கப்படுவதால் அதைக் கணக்கிட்டு பேட்டா வழங்க வேண்டுமெனக் கோரினோம்.

கடந்த 22.10.2026ஆம் தேதி அமைச்சரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். மேற்கண்ட சூழ்நிலையில், மகளிர் வெற்றிப்பயண பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இரட்டிப்பாக பேட்டா வழங்க 2.11.2026 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது.

சிஐடியு சார்பில் முன்வைத்த கோரிக்கை முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் வசூல் பேட்டாவில் ஏற்படும் குறைவிற்காக போக்குவரத்து கழகங்கள் உரிய இழப்பீடு வழங்கும் நடவடிக்கையைப் பரிசீலிக்குமாறு போக்குவரத்துச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே, போக்குவரத்துச் செயலாளர் கடித அடிப்படையில், முழுமையான பேட்டா ஈடுகட்டும் அடிப்படையில் அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, கடந்த 2018ஆம் ஆண்டு பேட்டா நிர்ணயித்ததில் குளறுபடி உள்ளது. இது சம்பந்தமான தாவா நிலுவையில் உள்ளது. அதேபோல், முழு வசூல் தொகையையும் கணக்கிட்டு அதற்கு ஏற்ற அடிப்படையில் இன்சென்டிவ் தொகை ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத காரணத்தால் தொழில்நுட்பம், அலுவலகப் பணியாளர்களுக்கு தொடர்ந்து இன்சென்டிவ் குறைந்துவருகிறது.

இவை அனைத்தையும் கவனத்தில்கொண்டு அரசு ஓட்டுநர், நடத்துநர்களின் பேட்டா, தொழில்நுட்ப ஊழியர்களின் இன்சென்டிவ் போன்ற பிரச்னைகளில் உரிய தீர்வுகாண வேண்டும்.” என்று சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவண்.

கே.ஆறுமுக நயினார்.

பொதுச்செயலாளர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்,சிஐடியூ.