தி.க. தலைவர் கி.வீரமணி 
தமிழ் நாடு

‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’

Staff Writer

எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்? தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து:

”தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார்.

‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’ என்ற கேள்விக்கணை அவரை நோக்கி மக்கள் மன்றத்தில் கிளம்பினாலும் ‘அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்கு எதிராக நடக்கிறோமே’ என்று சற்றும் உணர்வின்றி தொடர்ந்து நடந்து கொண்டு வருவது மகா மகா வெட்கக் கேடு!

இது அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்தும் மரபுமீறிய, தரந் தாழ்ந்த கண்டனத்திற்குரிய ஒரு நடவடிக்கையேயாகும்!

தமிழ்நாடு ஆட்சியின்மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்வதற்காகவே ஆளுநர் மாளிகையை போட்டி அரசின் தலைமையிடமாகப் பயன்படுத்துவது சரியானதுதானா?” என்று வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.