தீண்டாமை ஒழிப்பு முன்னணி 
தமிழ் நாடு

வெளிப்படையான அணுகுமுறை- தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை!

Staff Writer

தமிழ்நாடு அரசின் 2026 – 27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பட்டியல் சாதி, பழங்குடியின மக்களின் நலனுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், ஒதுக்கீடுகள், திட்டங்களின் செயலாக்கம், துணைத் திட்ட நெறிமுறைகளின் அமலாக்கம் ஆகியன குறித்து வெளிப்படையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

” பட்டியல் சாதி சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ரூ. 25,225 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ. 2,079 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என பட்ஜெட் கூறுகிறது. ஆனால், திட்ட ஒதுக்கீடுகள் குறித்த விவரங்கள் பட்ஜெட் உரையில் இல்லை. துணைத் திட்ட நிதி ஒதுக்கீடுகளில் எத்தகைய கணக்கீடு பின்பற்றப்படுகிறது என்பதை பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்க வேண்டும். 2025 – 26 இல் ஆதிதிராவிடர் கொள்கைக் குறிப்பில், திட்ட ஒதுக்கீட்டில் 21.97 சதவீதம் (ரூ. 20,365 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது ரூ. 25,225 கோடி என்பதை தொகையளவில் உயர்வு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த ஒதுக்கீடுகள் எவ்வாறு இலக்கிடப்பட்டு செலவழிக்கப்படுகின்றன என்பதுதான் முக்கியம். உண்மையில், ஒதுக்கீடுகளில் எவ்வளவு குறிப்பாக பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு நேரடியாக இலக்கிடப்பட்டு (Targeted) சென்றடைகின்றன என்பதை உறுதி செய்யாவிட்டால், பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்கு என்ற பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும் பகுதி அரசின் பொதுத் திட்டங்களுக்கே திருப்பிவிடப்படும் துயரம் தொடர்வதை தடுத்திட முடியாது.

2024 இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் மற்றும் விதிகளின்படி, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

சமூக நீதிதுறைக்கான ஒதுக்கீட்டில் 2026 – 27 இல் ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2022 – 23 இல் ரூ. 4,281 கோடியாக இந்த ஒதுக்கீடு இருந்தது. 2021 – 22 ஆம் ஆண்டிலேயே ஒதுக்கீடு ரூ. 4,000 கோடிகளுக்கு அதிகமாக இருந்த நிலையில், இதற்கேற்ற வகையில் தற்போது ஒதுக்கீடு இருந்திருக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அயல் கல்வித் திட்டத்திற்கு பயனாளிகள் எண்ணிக்கை 362 ஆகவும், அயோத்திதாசர் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்பிற்குரியது. எனினும், நிலம் வழங்கும் மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ. 20 கோடி என்பதும், பட்டியல் சாதி தொழில்முனைவோர் திட்டத்திற்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு என்பதும் போதுமானதல்ல.

மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் போவதும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அவ்வாறு செலவிடப்படாத தொகை காலாவதியாகாமல், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

மேலும், சட்டமன்ற சிறப்பு அமர்வுகள் மூலம் பட்டியல் சாதி, பழங்குடியின மக்களுக்கான திட்டங்களின் செயலாக்கம் நெறிமுறைகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுவதை விவாதிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக்கொள்கிறது.” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.