நடிகர் ரஜினிகாந்த்  
செய்திகள்

என்னை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

Staff Writer

தனது 50 ஆண்டு கால திரைத் துறை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். 170-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ள ரஜினி, சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.

50 ஆண்டு பொன்விழாவையொட்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அனைவருக்கும் 79ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமானமு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.