முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 
செய்திகள்

‘அதெல்லாம் அன்றே முடிந்தது… ஆளை விடுங்க’ – கையெடுத்துக் கும்பிட்ட செங்கோட்டையன்!

Staff Writer

வீட்டின் முன் கூடும் தொண்டர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அன்று பேசியது அன்றே முடிந்தது. ஆள விடுங்க' என கையெடுத்து கும்பிட்டு விட்டு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நழுவி சென்றார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்திய, அ.தி.மு.க.பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அ.தி.மு.க.முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா படங்கள், அதற்கான விழா அழைப்பிதழ், பிளக்ஸ் பேனர், டிஜிட்டல் போர்டுகளில் இடம் பெறவில்லை என்பதால் பாராட்டு விழாவுக்கு செல்லவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

அவரை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் கூடினர். அவர்களிடம் கையெடுத்து கும்பிட்ட செங்கோட்டையன், எதுவும் பேச மறுத்தார். கட்சியினர் கூடியிருப்பது பற்றி கேட்டபோது அவர் கூறுகையில், ''பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக கட்சிக்காரர்கள் என்னைச் சந்திக்க வந்துள்ளனர். எப்போதும் எனது வீட்டில் கூட்டம் இருப்பது வழக்கம் தான். எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. அன்று பேசியதெல்லாம் அன்றோடு முடிந்தது; ஆள விடுங்க,'' என பதில் அளித்து கையெடுத்துக் கும்பிட்டு விட்டு செங்கோட்டையன் காரில் புறப்பட்டு சென்றார்.